பச்சோந்தி கூட நமது பிரதமர் அளவிற்கு வேகமாக நிறம் மாறுவதில்லை- மனோ தங்கராஜ்
பச்சோந்தி கூட நமது பிரதமர் அளவிற்கு வேகமாக நிறம் மாறுவதில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில், “பச்சோந்தி கூட நமது பிரதமர் அளவிற்கு வேகமாக நிறம் மாறுவதில்லை:
1. ஒடிசா தேர்தலின் போது பூரி ஜெகநாத் கோயிலின் சாவியை தமிழர்கள் திருடிச்சென்று விட்டார்கள் என்று தைரியமாக தமிழர்களை இழிவுபடுத்துவார்; ஆனால் கூச்சமே இல்லாமல் இங்கு வந்து "பொங்கலு நலு வாழ்த்துக்கலு" என்பார்!
2. தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை எப்படி ஆளலாம் என்பார்; அவரோ குஜராத்தில் இருந்து உ.பி. சென்று போட்டியிடுவார்.
3. தமிழர்களின் உணவை இழிவுபடுத்தி அவரது கட்சியினரை வைத்து வீடியோ வெளியிடச் செய்வார்; அடுத்த மேடையில் இட்லி தோசை சிறப்பான உணவு என நாடகமாடுவார்.
4. போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஆக்ரோஷமாக முழங்குவார்; ஆனால் குஜராத் வழியாக இந்தியாவிற்குள் போதைப்பொருள் வருவது குறித்து வாய் திறக்கமாட்டார்!
5. பணமதிப்பிழப்பு தீவிரவாதத்தை அடியோடு நிறுத்தும் என்றார்; ஆனால் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் தாக்குதல் நடைபெறும் போது "விடமாட்டோம், திருப்பி அடிப்போம்" என வீராப்பு பேசுவார்!
6. டாலர் மதிப்பு 60 ரூபாயாக இருக்கும் போது, இந்திய ரூபாய் மரணப்படுக்கையில் இருப்பதாக நக்கலடித்தவர், இன்று 94 ரூபாயாக உயர்ந்திருக்கிறது, வாயே திறக்கமாட்டார்!
7. தேசத்தந்தைக்கும் மாலை இடுவார்; அவரை சுட்டுக்கொன்ற கோட்ஸேயின் தலைவன் சாவர்க்கருக்கும் மாலை இடுவார்!
8. பக்தர்கள் பயன்படுத்தும் அகர்பத்தி, கற்பூரம், பூஜை தட்டுகள், உலோக கடவுள் சிலைகள், வழிபாட்டு பொருட்களுக்கு GST மூலம் இந்துக்களின் பணத்தை சுரண்டுவார்; ஆனால் திமுக இந்து விரோத கட்சி என்பார்;
9. தமிழ்நாட்டின் வரிவருவாயை உத்திரப்பிரதேசத்திற்கும், பீகாருக்கும் பங்கிட்டு கொடுப்பார்; தமிழ்நாட்டில் வந்து, தான்-தான் தமிழ்நாட்டை தாங்கி பிடித்திருப்பது போல நடிப்பார்.
10. UPA ஆட்சியில் பெட்ரோல் விலை ஏற்றத்தை - அரசின் தோல்வி என்றார்; பாஜக ஆட்சியில், பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு நேரு தான் காரணம் என்பார்.
11. அதிமுக ஊழல் கட்சி என்பார்; தேர்தல் வந்ததும் கூச்சமே இல்லாமல் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வார்.
12. ஊழல் கடலில் புரண்டு சிறைச்சாலையில் தள்ளப்பட்டவர்களை தன் கட்சியில் ஒளித்து வைத்துக் கொண்டு, பாஜக தூய்மையான கட்சி என முரசு கொட்டுவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.