திமுக மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் - அமைச்சர் ராஜ்மோகன்..!
கோவை காந்திபுரத்தில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலக நூலகம், கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டமாகும். இதற்கான கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், த.வெ.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இதற்கான பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து கடந்த மாதம் முதலமைச்சர் விஜய், பெரியார் அறிவுலக நூலகத்தை திறந்து வைத்தார்.
இந்த நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட கொள்முதலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விதம், பதிப்பகங்களின் தேர்வு மற்றும் வாங்கப்பட்ட புத்தகங்களின் தரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், அமைச்சர் ராஜ்மோகன், பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: இந்தியாவிலேயே முதல்முறையாக ஏஐ ஊழல் திமுக செய்துள்ளது. அகல்விளக்கு பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை கொடுத்தது திமுக அரசு; அகல்விளக்கு பதிப்பகம் 7 நாட்களில் புத்தகத்தை வழங்க நிபந்தனை விதித்துள்ளது. தெம்பு, திராணி இருந்தால் தி.மு.க ஊதுகுழல்கள் மறுக்க முடியுமா? குப்பைகளை விட மோசமான புத்தகங்களை வாங்க திமுக அரசு கொள்முதல் ஆணை வழங்கியது. திமுக ஆட்சியில் குப்பைகளை விட மோசமான புத்தகங்கள் 40 பெட்டிகள் வந்தன.
திமுக ஆட்சியில் மார்ச் மாதத்திலேயே போலி புத்தகங்களுக்கு பணம் தரப்பட்டு விட்டது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு புத்தகம் கூட நூலகங்களுக்கு கொள்முதல் செய்யப்படவில்லை; ஏஐ மூலம் எழுதப்பட்ட புத்தகங்களை ரூ.50 கோடிக்கு பல்வேறு நூலகங்களுக்கு வாங்க கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு உள்ளது.திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி தான் போலி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. திமுக அரசின் அழுத்தம் காரணமாக குழு குப்பை போன்ற புத்தகங்களை பரிந்துரைத்துள்ளது. அகல்விளக்கு பதிப்பகத்திற்கு கடந்த மாரச் மாதம் பேமென்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
குப்பை போன்ற புத்தகங்களை வாங்கும் பரிந்துரையில் ஜெயரஞ்சன் கையெழுத்திட்டுள்ளார். புத்தகங்களை ஒப்படைத்து பணத்தை திரும்ப பெறுவோம். கமிஷன் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெறுவோம். நூலகங்களில் ஏஐ ஊழல் செய்த திமுகவினர் மாணவர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். போலீசார் மூலமும் ஊழல் செய்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நூலக புத்தக ஊழல் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்படும். குப்பை போன்ற புத்தகங்களை திமுகவினர் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு வழங்குவார்களா? ஈவெரா நூலகம் கட்டப்பட்டதிலும் ஊழல் நடந்துள்ளதா என விசாரிக்க வேண்டும்.
நூலகங்களில் திமுக ஆட்சியில் நடந்த அட்டூழியங்களை அம்பலப் படுத்துவோம். தமிழகம் முழுவதும் இருக்ககூடிய நூலகங்களில் திமுக ஆட்சி காலத்தில் டிஜிட்டல் கரையான் அரித்திருக்கிறது, நூலகங்களில் ஊழல் செய்துவிட்டு திமுகவினர் எப்படி கூச்சமே இல்லாமல் நடமாடுகின்றனர்? இவ்வாறு ராஜ்மோன் கூறினார்