×

“சமூக வலைதளத் தந்திரங்களை பயன்படுத்தி வென்றுள்ளனர்”- கே.என். நேரு 

 

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி திமுக மத்திய, வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான கே என் நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகங்களில் ஜூன் 3-ம் தேதி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் அன்று கழக கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி, கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளை சமூக வலைதளங்களில் வீடியோக்களாக பதிவிட்டு இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கழக முதன்மைச் செயலாளர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களை நியமித்த கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.கடந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த திருச்சி மாவட்ட வாக்காள பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திமுக முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு உரையாற்றுகையில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் குறித்தும், கழகத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார். திமுக இன்றும் தனித்து நின்று களம் காணும் நிலையில் உள்ளது. நம்முடன் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இதர தோழமை கட்சிகள், பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற காரணத்திற்காகத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் போன்ற கட்சிகள் முந்தைய காலங்களில் நம்மை இக்கட்டான நிலைக்குத் தள்ளிச் சென்ற வரலாறும் உண்டு.தற்போதைய தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், நமக்கும் எதிர்தரப்பிற்கும் உள்ள வாக்கு வித்தியாசம் வெறும் 17 லட்சம் தான். 27 தொகுதிகளில் நாம் 1,000 முதல் 2,000 வாக்குகள் என்ற மிகக் குறைந்த வித்தியாசத்திலேயே வெற்றியைத் தவறவிட்டிருக்கிறோம். தேர்தல் இன்னும் சில நாட்கள் முன்னதாக நடந்திருந்தால் வெற்றி வாய்ப்பு நமக்கே சாதகமாக இருந்திருக்கும். கடைசி மூன்று நாட்களில் வீசிய ஒரு மாற்றுக் காற்றினால் இந்தச் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.முன்பு திமுக - அதிமுக என்றிருந்த போட்டி, இன்று ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சியான நமக்கும் இடையிலான போட்டியாக மாறியிருக்கிறது.தமிழக வெற்றிக்கழகம் போன்ற புதிய வரவுகள் வாக்குகளைப் பிரித்துள்ளன.அதிமுக கூட்டணியின் வாக்குகள் எங்கு திரும்பும் என்ற கணக்கும் உள்ளது.குறிப்பாக, சமூக வலைதளங்களை மிகத் தந்திரமாகப் பயன்படுத்தி, இளைய தலைமுறை மற்றும் குடும்பங்களிடம் அவர்கள் நேரடியாகச் சென்றடைந்து வாக்குகளைப் பெற்றுள்ளனர். நாம் அவர்களை ஒரு பொருட்டாகக் கருதாமல் இருந்த நேரத்தில் அவர்கள் இந்தத் தந்திரத்தால் முன்னேறியுள்ளனர்.கழகத்தை மீண்டும் வலுப்படுத்த முத்தமிழறிஞர் கலைஞர் என்ற பெயரே மிகப்பெரிய ஆயுதம் உள்ளது. ஜூன் 3-ஆம் தேதி கலைஞரின் 103-வது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு கிளைக்கழகத்திலும் கழகக் கொடியேற்றி, பள்ளி மாணவர்களுக்கும், பெரியவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். கலைஞரின் புகழையும், சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலமே நாம் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முடியும்.அமைச்சராக எனக்கு இருக்கும் பொறுப்பை விட, களத்தில் நிற்கும் ஒன்றியக் கழகச் செயலாளர்களுக்குப் பொறுப்பு அதிகம். கட்சி இக்கட்டான சூழலில் இருந்தபோது திருச்சி மாவட்டம் தான் எப்போதும் அரணாக நின்று வெற்றியைத் தேடித்தந்தது. அதேபோல், இப்போதும் மெத்தனமாக இருக்காமல் அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும் என்றார்.