“நான் யாருக்கும் துரோகம் செய்ததில்லை, எந்தத் தவறும் செய்ததில்லை”- கே.என்.நேரு
நான் யாருக்கும் துரோகம் செய்ததில்லை, எந்தத் தவறும் செய்ததில்லை என் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு என்னால் பதில் அளிக்க முடியும் என திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பிரச்சாரத்தில் பேசினார்.
திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடுகிறார். அவர் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து திறந்த வெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். இருசக்கர வாகனங்கள் புடைசூழ பேரணியாக புறப்பட்ட அவர் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம், தலைமை தபால் நிலையம், ஒத்தக்கடை, கண்டோன்மெண்ட், புத்தூர், உறையூர் சாஸ்திரி சாலையில் , பீமநகர், கிராப்பட்டி வழியாக சென்று எடமலைப்பட்டி புதூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
அங்கு பேசிய அமைச்சர் கேஎன் நேரு, “என் மீது சிலர் குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள் அந்த குற்றச்சாட்டுகளுக்கும் என்னால் பதிலளிக்க முடியும். எந்த தவறும் நான் செய்யவில்லை என்பதை நிரூபிக்கவும் முடியும். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் அது குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. என்னை நம்பி வாக்களித்த உங்களுக்கு நான் ஒரு நாளும் துரோகம் செய்ய மாட்டேன்.என் மீது குற்றச்சாட்டு வைத்து நான் சிறைக்கு செல்வேன் என கூறும் அண்ணாமலை எந்த பதவியும் வகித்தது இல்லை ஆனால் அவரிடம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளது. அது தொடர்பான வழக்கு இருப்பதால்தான் இந்த முறை போட்டியிட அவருக்கு அந்த கட்சியில் வாய்ப்பே வழங்கவில்லை. ஜெயலலிதா எங்கள் மீது பல வழக்குகள் போட்டு உள்ளார், நாங்கள் பலமுறை சிறைக்கு சென்று வந்துள்ளோம். அந்த வழக்குகளில் நான் நேர்மையானவன் என நீதிமன்றமே தீர்ப்பளித்து விடுவிக்க பட்டேன்.
இப்பொழுது தொடுக்கப்பட்ட வழக்கிலும் நிச்சயம் விடுதலை யாவேன். யார் சொத்துக்கும் நான் ஆசைப்பட்டவன் அல்ல யாருக்கும் துரோகம் செய்தவன் அல்ல. கட்சியின் தலைவர் சொல்வதையும் கட்சியின் தொண்டர்கள் சொல்வதை கேட்டு தான் செயல்படுவேன. மு.க.ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது கட்டம் சரியில்லை என்றார்கள் அதை முறியடித்துள்ளார். அதே போல இரண்டாவது முறையாக திமுக ஆட்சிக்கு வராது என்கிறார்கள் அதையும் முறியடிப்பார். முதலமைச்சர் மீது எந்த குறையும் சொல்ல முடியாததால் எடப்பாடி பழனிச்சாமி தனிப்பட்ட முறையில் விமர்சன்ம் செய்கிறார். எடப்பாடி பழனிச்சாமியின் இன்னொரு முகம் முத்துச்சாமிக்கு தான் தெரியும். அவர் இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி இன்று எங்கு இருந்திருப்பார் என்பதை தெரிந்திருக்காது. அதிக தவறு செய்தவர்கள் திமுக மீது குற்றம் சொல்கிறார்கள். அதிமுக மட்டுமில்லையென்றால் சி.ஏ.ஏ சட்டமே வந்திருக்காது. தொகுதி மறுவரைக்கும் அதிமுக ஆதரவு அளித்துள்ளார்கள். இதையெல்லாம் சிறுபான்மை சமூக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் மக்களுக்கு நேர்மையானவர்களாக, நியாயமானவர்களாக நிச்சயம் நாங்கள் இருப்போம்” என்றார்.