திமுகவினர் ஷாக்..! திருச்சி சிவா குடும்பம் மீது போலீசில் மோசடி புகார்!
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பி. மேரி என்ற பெண் மருத்துவர், சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த அதிரடிப் புகாரை அளித்துள்ளார். அந்தப் புகாரில், திருச்சி சிவாவின் மகளான காயத்ரி மற்றும் அவரது கணவரான கராத்தே முத்துக்குமார் ஆகிய இருவருடனும் தங்களுக்கு நீண்ட நாட்களாகக் குடும்ப ரீதியான நட்பு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த பழக்கத்தைப் பயன்படுத்தி, அவசரத் தேவை என்று கூறி தங்களிடமிருந்து பல்வேறு தவணைகளாகச் சுமார் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைப் பெற்றுக் கொண்டதாக மருத்துவர் மேரி தெரிவித்துள்ளார்.
பணம் மட்டுமின்றி, தங்களின் குடும்பத்திற்குச் சொந்தமான 50 சவரன் தங்க நகைகளையும் தற்காலிகத் தேவைக்காகக் கேட்டு அவர்கள் வாங்கிச் சென்றதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கொடுத்த பணத்தையும் நகையையும் நீண்ட நாட்களாகியும் அவர்கள் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்துத் தற்பொழுது நேரில் சென்று கேட்டபோது, திருச்சி சிவாவின் மகள் காயத்ரி மற்றும் மருமகன் முத்துக்குமார் ஆகிய இருவரும் தங்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பெண் மருத்துவர் மேரி தனது புகாரில் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அயனாவரம் குற்றப்பிரிவு போலீசார் தற்பொழுது தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். திமுகவின் மிக மூத்த நாடாளுமன்ற உறுப்பினரின் குடும்பத்தினரே இத்தகைய பல லட்ச ரூபாய் நகை மற்றும் பண மோசடிப் புகாரில் சிக்கியிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் அடுத்தகட்ட விசாரணைக்குப் பிறகே இதன் முழு பின்னணியும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.