வாழ்விழந்த விவசாயிகளின் வயிற்றில் திமுக அரசு அடிக்கிறது - நயினார் நாகேந்திரன்..!
Dec 24, 2025, 13:49 IST
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: டிட்வா புயலால் பாதிப்படைந்த அனைத்து டெல்டா விவசாயிகளுக்கும் பல வாரங்களாகியும் திமுக அரசு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. பழுதடைந்த அரசு தானியக்கிடங்குகளாலும், கொள்முதல் செய்வதில் அரசு காட்டிய அலட்சியத்தாலும் தான் பல டன் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முளைப்பு கட்டிப்போயின.
தங்களின் பல மாத உழைப்பு பாழாய்ப்போனதைக் கண்டு கலங்கி நிற்கும் விவசாயிகளுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லாமல், நெற்பயிர்களைப் பார்சலில் கொண்டு வந்து ஆய்வு செய்தார் முதல்வர். ஆய்வு செய்து பல வாரங்களாகியும் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகையை இன்னும் வழங்காமல் திமுக அரசு இழுத்தடிப்பது நியாயமல்ல.
''நானும் டெல்டாகாரன்' என மேடையில் முழங்குவதை விட, ஏக்கருக்கு ரூ. 30,000 இழப்பீடு வழங்கி விவசாயிகளின் துயரத்தைத் துடைப்பது தான் சாலச் சிறந்தது என்பதை முதல்வருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்விழந்த விவசாயிகளின் வயிற்றில் திமுக அரசு அடிக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தகுந்த இழப்பீடு வழங்காமல் வஞ்சித்து வரும் திமுக அரசின் அலட்சியமே அக்கட்சியின் ஆட்சி அரியணைக்கு முடிவுரை எழுதப்போகிறது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.