×

மதுரையில் தொடங்கியது திமுக பொதுக்குழு கூட்டம்..!

 

மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக மாநில பொதுக்குழு கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம்.  அந்தவகையில்  இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக 47 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.  இதற்காக நேற்று பிற்பகல் 1 மணியளவில் விமானம் மூலம் மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  சுமார் 25 கி.மீ தூரத்திற்கு பிரம்மாண்ட அளவில் ரோடு ஷோ நடைபெற்ற நிலையில்,  சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மலர்த்தூவி, வாழ்த்து கோஷமிட்டு வரவேற்பு அளித்தனர். 

தொடர்ந்து சுற்றுலா மாலையில் ஓய்வெடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை புறப்பட்டு உத்தங்குடியில் அமைக்கப்பட்டுள்ள விழா அரங்கிற்கு வருகை புரிந்தார். இதற்காக சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன், 20 ஏக்கர் பரப்பளவில் பொதுக்குழு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சிக் கொடியை ஏற்றவுள்ளார். அத்துடன் திமுக அமைப்பு ரீதியான 76 மாவட்டங்களுக்கு தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுமார் 3,400 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் கொண்டு வருபவர்கள் மினிட் புத்தகத்தில் கையெழுத்து போட்ட பின்னர் அவர்களுக்கு பேட்ஜ் வழங்கப்பட்டு சோதனைக்குப் பிறகே அனுமதி வழங்கப்படுகிறது. அத்துடன் 23 அணியின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்  4 ஆயிரம் பேர் என மொத்தமாக 7,500 பேர் வரை இந்த பொதுக்குழுவில் கலந்துகொண்டுள்ளனர். 

பொதுக்குழு கூட்டம்  கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வி.ஐ.பி.களுக்கான பாதையில் செல்லாமல் , தொண்டர்கள் மத்தியில் வாழ்த்து பெற்ற படியே நடந்து சென்றார். தொடர்ந்து  பெரியார், அறிஞர் அண்ணா, பேராசிரியர் படங்களுக்கு  மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பொதுக்குழு தொடங்கிய நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அணி தொடங்கப்படவுள்ளது  உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.  அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் உரையாற்றவுள்ளார்.