இன்ஸ்டாகிராம் வாயிலாக துப்பாக்கி விற்பனை செய்த திமுக நிர்வாகி கைது!
நெல்லையில் நாட்டு துப்பாக்கியை வடமாநிலத்தில் இருந்து வாங்கி கூலிப்படையிடம் விற்பனை செய்ய முயன்ற வழக்கில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பாலா (வயது 42). இவர் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக நாட்டுத் துப்பாக்கி ஒன்றை விற்பனை செய்வதற்காக நெல்லைக்கு வாங்கி வந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அமீர் சோகைன் (வயது 25). என்பவரும் இதுபோன்ற நாட்டு துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வாங்கி கோழி படையினருக்கு சப்ளை செய்து வரும் தொழில் செய்து வருகிறார். பாலா தனது நாட்டு துப்பாக்கியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரூ.1.25 லட்சத்தை பெற்றுக்கொண்டு அமீர் சோகைனிடம் நாட்டு துப்பாக்கி விற்பனை செய்திருக்கிறார்.
அமீர் சோகைன் துப்பாக்கியை பெற்று தனது வீட்டில் யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் வைத்திருந்திருக்கிறார். தன்னிடம் துப்பாக்கி இருப்பதை பல கூலிப்படையினரிடம் தெரிவித்திருக்கிறார். சரியான விலை வரும் வரை காத்திருந்த அமீன் சோகைன் குறித்து நெல்லை மேலப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று அதிகாலை நேரத்தில் மேலப்பாளையம் காவல்துறையினர் அமீர் சோகைனின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ஒரு நாட்டுத் துப்பாக்கியை அமீர் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. காவல்துறையினர் அதை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அமீர் சோகை தனக்கு துப்பாக்கியை வாங்கி தந்தது பாலா என தெரிவித்த அடிப்படையில் பாலாவையும் காவல்துறையினர் தற்போது கைது செய்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்திருக்கின்றனர்.
இது தொடர்பாக நெல்லை மாநகர கமிஷனர் மணிவண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நெல்லை துணை கமிஷனர் வினோத் சாந்தாராம், மாநகர கமிஷனர் மணிவண்ணன் இருவரும் தற்பொழுது மேலப்பாளையம் காவல் நிலையத்தில் உள்ள பாலா மற்றும் அமீர் சோகைனிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய நெல்லை ரஹ்மானியாபுரத்தைச் சேர்ந்த முசபில் முர்ஜித் (வயது 21) என்ற வாலிபரை காவல்துறையினர் 3வதாக கைது செய்தனர். பாலா நெல்லை மத்திய மாவட்ட திமுகவில் பொறியாளர் அணியில் இருப்பவராவார். இவர் இன்ஸ்டாகிராம் வாயிலாக துப்பாக்கி விற்பனை செய்தது குறிப்பிடதக்கது.