ஆம்னி பேருந்துகளில் 8 மடங்கு கட்டண உயர்வு- கே.என்.நேரு கண்டனம்
ஆயுதபூஜை தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அடிக்கும் பல மடங்கு கட்டணக் கொள்ளையை தடுக்காமல் தவெக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு கூறியுள்ளார்.
இதுகுறித்து கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயுதபூஜை தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் அடிக்கும் பல மடங்கு கட்டணக் கொள்ளையை தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது தவெக அரசு. பண்டிகைக் காலங்கள் என்றாலே, சாமானிய மக்களின் மகிழ்ச்சியை விட தனியார் பஸ் உரிமையாளர்களுக்குதான் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆயுதபூஜை தொடர் விடுமுறையில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்ட சாமானிய மக்களிடம் ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளையை தடுக்க முடியாமல் விஜய் அரசு திணறி கொண்டிருக்கிறது. எந்தவித திட்டமிடலும் இல்லாமல் திராவிட மாடல் ஆட்சியின் விடியல் பயணத்தை மாற்றி, விரிவாக்கம் செய்து வெற்றி பயணம் என ஸ்டிக்கர் ஒட்டி, ஆட்டோ டிரைவர்களையு, தனியார் பேருந்து உரிமையாளர்களையும் ஒரு பக்கத்தில் நட்டத்தில் விட்டு இன்னொரு பக்கம் பண்டிகை காலத்தில் சாமானிய மக்களிடம் இருந்து அறுவடை செய்ய வழியும் காட்டுகிறார்கள். இதனையெல்லாம் முன்கூட்டியே கணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய விஜய் அரசு, ஸ்டிக்கர் ஒட்டுவதில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. நிர்வாகம் என்றால் என்னவென்றே இவர்களுக்கு தெரியவில்லை.
பண்டிகை காலங்களில் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று மடங்கு கட்டண உயர்வு இருப்பதை கேள்விபட்டிருப்போம். ஆனால், இப்போது 8 மடங்கு கட்டண உயர்வு என்பதெல்லாம் விசில் புரட்சி ஆட்சியில்தான் பார்க்கிறோம். அரசுப் பேருந்து கட்டணத்தோடு ஒப்பிட்டால், இது 12 மடங்கு அதிகம். இந்த பகிரங்கமான சுரண்டலை இதுவரை தமிழ்நாடு பார்த்ததில்லை. மாதாந்திரச் சம்பளத்தை நம்பி வாழும் நடுத்தரக் குடும்பம், பண்டிகைக்கு ஊருக்குச் செல்லவே முடியாத நிலையே ஏற்படுத்திவிட்டார்கள். எப்படியாவது ஊருக்கு போக வேண்டும் என நினைப்பவர்கள் தங்களின் ஒரு மாதச் சேமிப்பை இழந்துதான் போக வேண்டும். அப்படி பயணிப்பவர்கள் எல்லோரும் இந்த ஆட்சியை கழுவி ஊற்றுவதை கோயம்பேட்டிலும் ஆலந்தூரிலும் கிளாம்பாக்கத்திலும் போக்குவரத்துறை அமைச்சர் பார்த்தால் ஆயிரம் ரீல்ஸ்கள் எடுக்கலாம். அரசு நிர்ணயித்த கட்டணக் கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, பண்டிகைக் காலத்தில் கொள்ளை அடிப்பவர்கள் மீது போக்குவரத்து துறை அமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்தார்? அரசு மோட்டார் வாகனச் சட்டங்களும், விதிகளும் யாருக்காக இருக்கின்றன? போக்குவரத்து துறை என ஒன்று செயல்படுகிறதா? கட்டண கொள்ளையை தெரிவிக்க 24 மணி நேர உதவி எண்ணை விளம்பரப்படுத்தினீர்களே.. அப்படி நடவடிக்கை எடுத்ததற்கான ஆதாரத்தை வெளியிட முடியுமா?
மக்களின் பண்டிகை மகிழ்ச்சியை விலை பேசுவர்களுக்கு “கமிஷன் வாங்கிக்கொண்டு” தவெக அரசு துணை போகிறதா என்று மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.விநாயகர் சதுர்த்தி விடுமுறையின் போது ’அரசு பஸ்கள் இல்லை. கட்டணக் கொள்ளை’ என புகார்கள் கிளம்பியதும் அதை மறைக்க இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்களை கிளம்பாக்கத்தில் ஒரே நேரத்தில் இறக்கிவிட்டு ரீல்ஸ்கள் போட்டீர்களே… அது போல ஆயுதபூஜை விடுமுறையிலும் பிஆர் ஸ்டண்ட் நாடகம் நடத்த ஐடியா எதுவும் வைத்திருக்கிறீர்களா?தொடர் விடுமுறை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க, திராவிட மாடல் ஆட்சியில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
* 30-க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்துத் துறை (RTO) சிறப்புக் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. சென்னை கோயம்புத்தூர், மதுரை, திருச்சி நகரங்களில் அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
* அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டது.
* ஆன்லைன் முன்பதிவு செயலிகளில் பண்டிகை நாட்களில் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்படுவதை கண்காணித்தோம்.
* நீதிமன்ற உத்தரவுகளின்படி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தங்களின் அதிகபட்ச கட்டணப் பட்டியலை இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட அறிவுறுத்தப்பட்டனர். அதைத் தாண்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது.
* கூடுதல் அரசு பேருந்துகளை இயக்கி நடுத்தர மக்கள் தனியார் பேருந்துகளைச் சார்ந்து ஏமாறுவதைப் பெருமளவில் குறைத்தோம்.
இப்படியான எந்த நடவடிக்கையையும் தவெக அரசு செய்யவில்லை. குதிரை பேரத்தில் காட்டும் வேகத்தை ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்கு காட்டவில்லை. பஸ்சில் கேட்கும் விசில் சத்தம் எல்லாம் மக்களின் காதுகளில் நாராசமாகதான் ஒலிக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.