“எனக்கு தூக்கமே வரல; ரத்தம் கொதிச்சு போய்டுச்சி.. இந்நேரம் இந்த அரசாங்கம் துடிச்சிருக்கணுமே”- துரைமுருகன்
தமிழக அனுமதியின்றி கர்நாடகா மேகதாது அணையை கட்ட முடியாது என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் நாள் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்” என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அவர்கள் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில், தமிழக மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இதுகுறித்து வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் துரைமுருகன், “அபத்தமான, ஆபத்தான ஒரு கருத்தை மத்திய ஜல் சக்தி இணையமைச்சர் கூறியுள்ளார். இது முற்றிலும் தவறு. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இதுபோல் எங்கேயும் கூறவில்லை. தீர்ப்பில் பலவற்றை கழித்துக் கட்டிவிட்டு ஒரு சிலவற்றை மட்டும் அமைச்சர் கூறி இருக்கிறார். பெரிய பதவியில் இருக்கும் அமைச்சர் இப்படி தவறான செய்தியை வெளியிடுவது வருத்தத்திற்குரிய விஷயம். மத்திய அமைச்சரின் இந்த கருத்தை கேட்ட பிறகு எனக்கு உறக்கம் வரவில்லை, ரத்தம் கொதிக்கிறது. தமிழக அனுமதியின்றி கர்நாடகா மேகதாது அணையை கட்ட முடியாது. இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும். தமிழ்நாடு பாலைவனமாக மாற இருக்கிறது. அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து இதனை தடுக்க வேண்டும். மேகதாது விவகாரத்தில் பெங்களூரு செல்லும் முதல்வர், ஏன் டெல்லி செல்லக்கூடாது? மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் ரத்தம் துடித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் எந்த கட்சி எப்படி இருந்தாலும் யார் எதிரியாக இருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் காவிரி பிரச்னை என்றால் எல்லோரும் ஒன்றாக சேருகிறார்கள். செண்ட்ரல் போர்டு கமிஷனில் பாதி பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். அதனால்தான் இவ்வளவு பெரிய பிரச்சனை.ஒரு தவறு செய்தாலும் அவன் என் கட்சியாக இருந்தாலும் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் ஜோசப் விஜய் சொல்லியிருக்கிறார். சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ.கபிலன் தலைமையிலான கும்பல் நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதற்கு முதல்வர் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பார்ப்போம்” என்றார்.