“எங்களை எதிர்க்க திமுகவிற்கு துணிவில்லை ” - எடப்பாடி பழனிசாமி
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக 2026 இருக்கும், மக்களின் விருப்பம் அதிமுக ஆட்சிதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
NDTV தேர்தல் கருத்தரங்கில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக 2026 இருக்கும், மக்களின் விருப்பம் அதிமுக ஆட்சிதான். அதிமுக நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் என்.டி.ஏவை உள்ளே இழுத்து குழப்புகின்றார் மு.க.ஸ்டாலின். என்.டி. ஏ தேசிய அளவிலான கூட்டணி. தமிழ்நாடு அளவில் அதிமுகதான் அந்த கூட்டணிக்கு தலைமை. இப்பொழுது நடக்கவுள்ள தேர்தல் தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான். மத்தியில் யார் வேண்டும் என்பதற்கு அல்ல.
விஜய் இப்போதுதான் கட்சியை தொடங்கியிருக்கிறார். தேர்தலில் போட்டியிட்டு வாக்கு சதவீதத்தை தவெக நிரூபிக்க வேண்டும் விஜய் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. விஜய் அவரது ரசிகர்களைதான் முழுவதும் நம்புகிறார். நாங்கள் மக்கள் மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் அஇஅதிமுக ஆட்சி உறுதி. 210 இடங்களில் வெற்றிப்பெற்று அஇஅதிமுக ஆட்சி அமைக்கும். ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது நீக்கப்பட்டது தான். அவரை அதிமுகவில் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.