வாக்குச்சாவடியில் விசில் ஊதிய காவலர்களுடன் திமுக பூத் ஏஜென்ட் வாக்குவாதம்
கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்காக விசில் ஊதிய கர்நாடக போலீசாருடன் முன்னாள் எம்.எல்.ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தேர்தல் களத்தில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 139, 140 மற்றும் 141 ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறையினர், வரிசையில் நின்றிருந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் தொடர்ந்து விசில் அடித்து கொண்டிருந்தார்.
இந்த சூழலில், திமுக சார்பில் சீஃப் ஏஜெண்டாகப் பணியாற்றி வரும் முன்னாள் எம்.எல்.ஏ காமராஜ், காவல்துறையினரின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். குறிப்பிட்ட கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் இது போன்ற விசில் ஊதக் கூடாது என குற்றச்சாட்டு தெரிவித்தார்.