அண்ணா அறிவாலயத்தை வாடகைக்கு விடுவேன் என்பதா?- நிர்மல்குமாரை தறுதலை என விளாசிய ஆ.ராசா
அண்ணா அறிவாலயத்தை வாடகைக்கு விடுவேன் என்பதா? என அமைச்சர் நிர்மல்குமாருக்கு திமுக எம்.பி. ஆ.ராசா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை வாடிப்பட்டியில் நடைபெற்ற தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “தீய சக்தியான திமுகவை முதலமைச்சர் விஜய் ஒழித்து விட்டார். இன்னும் 2 ஆண்டுகளில் திமுகவினர் அரசியலை விட்டு விலகி விடுவார்கள். அண்ணா அறிவாலயத்தை வெள்ளையடித்து வாடகைக்கு விடும் நிலை உருவாகும். முரசொலி டிரஸ்ட்க்காக தான் இவ்ளோ போட்டியும்.. முரசொலி டிரஸ்ட்டை எந்த குடும்பம் கைப்பற்ற போகிறது என்பதில்தான் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. தீயசக்தி தி.மு.கவை ஒழிக்கணும்னு எம்.ஜி.ஆர் சொன்னாரு, தளபதி செஞ்சே முடிச்சிட்டாரு” என பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து இயக்குநர் அமிர்தம் இல்லத்திருமண விழாவில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, “பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் அரசியலில் கிரக பிரவேசம் நடத்திய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீட்டிற்கு வெள்ளை அடித்துக் கொண்டார்கள். அறிவாலயம் தோன்றிய பிறகுதான் தமிழ்நாடு தனக்கு வெள்ளை அடித்துக் கொண்டது. அந்த அறிவாலயத்தை குறைசொல்லும் தறுதலை கூட்டம் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறது. அவர்களை விரைவில் விரட்டியடிப்போம். தங்களது காருக்கு தேசிய கொடி வந்துவிட்டதால் சில தறுதலைகள் அறிவாலயத்தை வாடகைக்கு விடலாம் என பேசுகின்றனர்” என்றார்.