×

திமுக 110 மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் தயார்

 

தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய திமுக சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த ஆய்வுகளில் சில மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்திகள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கட்சியின் அமைப்பை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்தும் வகையில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

புதிய மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கு கட்சிக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, புதிய பொறுப்புகளில் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், மாவட்டச் செயலாளர்களை நேரடியாக நியமிப்பதை விட, உட்கட்சி தேர்தல் மூலம் தொண்டர்களின் ஆதரவுடன் நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என கனிமொழி தரப்பு வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடிமட்டத்தில் செல்வாக்கு பெற்றவர்களுக்கு பொறுப்பு வழங்கினால் மட்டுமே கட்சியை மீண்டும் வலுப்படுத்த முடியும் என்பதே இந்த தரப்பின் கருத்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாவட்டச் செயலாளர்கள் உட்கட்சி தேர்தல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள் என திமுக தலைமை அறிவித்துள்ளது. இதனால் கட்சிக்குள் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே புதிய மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் பட்டியல் தயாராகிவிட்டதாக பரபரப்பாக பேசப்படுகிறது. சுமார் 110 பேர் கொண்ட பட்டியலில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வழக்கமாக மாவட்டச் செயலாளர்கள் தேர்வுக்கு முன்பாக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவது திமுகவில் நீண்டகால நடைமுறையாக இருந்து வருகிறது. தற்போது தயாராகியுள்ளதாக கூறப்படும் 110 பேர் பட்டியல், செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவில் வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய நிகழ்ச்சியில் புதிய மாவட்டப் பொறுப்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்துவார் என்றும் கட்சி வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.