×

அதிமுக - பாஜக கூட்டணிக்கு செல்லும் தேமுதிக... உறுதி செய்த பிரேமலதா 

 

அரியலூர் மாவட்டம் அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 'இல்லம் தேடி - உள்ளம் நாடி' எனும் பிரச்சார பரப்பரையை இன்று மேற்கொண்டார். இதற்காக அரியலூர் சத்திரம் பகுதியில் இருந்து பேருந்து நிலையம் வரை விஜயகாந்த் ரதத்தில் ஏறி பொதுமக்களை சந்தித்தார்.

பின்னர், பேருந்து நிலையம் முன்பாக கூடியிருந்த தொண்டர்கள் முன்பு உரையாற்றிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெய்வமாக இருந்து நம்மை பார்த்துக் கொண்டுள்ளார். எங்கு தவறு நடந்தாலும் அந்த இடத்தில் முதல் ஆளாக வந்து கண்டிப்பவர். தற்போது தெய்வமாக இருப்பதால் கள்ளழகர் போல வந்து இறங்குவார், நம்மை காப்பாற்றுவார். இன்று முதல் 2026 2.0 ஸ்டார்ட். அரியலூரிலிருந்து தேர்தல் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகியுள்ளது. இன்றிலிருந்து நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இன்னும் தேர்தலுக்கு ஒன்பது மாதங்களே உள்ளது. தலைமைக் கழகம் என்ன சொல்கிறதோ, அதை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். தேமுதிக மூன்றாவது பெரிய கட்சியாக இன்று உள்ளது. அதை நம்பர் 1 கட்சியாக கொண்டு வர வேண்டிய கடமை உங்களிடம் உள்ளது.

அரியலூர் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது, அதை விரைந்து முடிக்க வேண்டும். சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. அதை உடனடியாக செப்பனிட வேண்டும். தேளூர் பகுதியில் ஆவின் குளிரூட்டும் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமைக்க வேண்டும். ஒருங்கிணைந்த நீதிமன்றம் விரைந்து அமைக்க வேண்டும். இவற்றையெல்லாம் இன்னும் இருக்கின்ற ஏழு, எட்டு மாதத்தில் செய்ய வேண்டும். இல்லையெனில் 2026 தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்று இந்த திட்டங்களை நாங்கள் செய்து முடிப்போம். அரியலூர் மாவட்டத்தில் இரண்டு கிலோ மீட்டர் அகலம், 70 கிலோமீட்டர் நீளத்தில் கொள்ளிடம் ஆறு பாய்ந்து ஓடுகிறது. அதிலிருந்து லட்சக்கணக்கான கன அடி நீர் நேரடியாக கடலில் கலக்கிறது. ஆனால், அரியலூர் மாவட்டம் வறண்டு கிடக்கிறது. மக்கள் பயன்பாட்டிற்கும், விவசாயத்திற்கும் அந்த நீரை திருப்பி விட அரசு ஏன் யோசிக்க மறுக்கிறது. இது கண்டனத்திற்குரிய ஒரு செயல். இவற்றையெல்லாம் இன்னும் இருக்கின்ற ஏழு, எட்டு மாதங்களில் அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றோம். இல்லையெனில் 2026 தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்று இதை செய்து முடிப்போம்” என பேசினார்.

2026 தேர்தலில் தேமுதிக திமுக கூட்டணியில் இடம் பெறும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், திமுக அரசுக்கு சூசகமாக பிரேமலதா விஜயகாந்த் பதில் தரும் வகையில் இன்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.