×

தேமுதிக மாநாடு தொடக்கம்... கொடியை ஏற்றினார் பிரேமலதா விஜயகாந்த்!

 

கடலூர் மாவட்டம் வேப்பூரில் தேமுதிக மாநாட்டை பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார். 

தே.மு.தி.க சார்பில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் நடைபெறுகிறது. சுமார் 150 ஏக்கரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டு திடலில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு முகப்பில் தேவாலயம், கோவில், பள்ளிவாசல் ஆகிய மும்மதங்களின் அடையாளங்களோடு முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயகாந்த் நடித்த படங்களின் கதாபாத்திரங்கள் அடங்கிய புகைப்படஙகள் முகப்பு பேனர்களில் வைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே விஜயகாந்த் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டை தொடங்கிவைத்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள கொடிகம்பத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். அதனை பரதநாட்டியம், மறைந்த விஜயகாந்த் பற்றிய ஆவணபடம் பட்டிமன்றம், கலைக்குழுவினரின் நடனம், பரத நாட்டியம், கிராமிய கலைக்குழுவினரின் பாட்டு, நடனம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தே.மு.தி.க எந்த கூட்டணியில் இணையப்போகிறது என்பதை இம்மாநாட்டு சிறப்புரையில் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு தே.மு.தி.க தொண்டர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.