☰
×

விரைவில் வருகிறது தீபாவளி : தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணபிப்பது எப்படி? 

 

தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிகமாகப் பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி

தற்காலிகப் பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 18.10.2026 ஆகும். அறிவிக்கப்பட்ட இந்தக் கடைசி தேதிக்குப் பின்னர் ஆன்லைனில் பெறப்படும் எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.  

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது கீழ்க்காணும் ஆவணங்களை இணைக்க வேண்டும்: 
 
* கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்திற்கான வரைபடம்.   
* கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம்; வாடகை கட்டிடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தப்பத்திரம் மற்றும் உரிமத்தினைக் காட்டும் ஆவணம்.   
* உரிமத்திற்கான கட்டணம் ரூ.500-ஐ அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் இ-சலான்.   
* இருப்பிடத்திற்கான ஆதாரம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை.   
* வரி ரசீது.   
* விண்ணப்பதாரரின் 2 புகைப்படங்கள்  

உரிமம் வழங்கும் நடைமுறை

ஆன்லைனில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மூலமாக உரிய கள விசாரணைக்கு உட்படுத்தப்படும். விசாரணை முடிவுற்றதும், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரம் ஆன்லைன் மூலமாகவே தெரிவிக்கப்படும்.  

விண்ணப்பம் ஏற்கப்பட்டவர்கள், தற்காலிக உரிமத்தின் ஆணையினை தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே இ-சேவை மையங்கள் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இந்த வழிமுறையானது தற்காலிக உரிமம் பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்; நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்விதிமுறைகள் பொருந்தாது.