☰
×

தீபாவளியும் எண்ணெய் குளியலும்..! தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணெய் குளியல் செய்வது ஏன்?

 

தீபாவளி வருவதற்கு சில நாள்களுக்கு முன்னரே அனைத்து வீடுகளிலும் பண்டிகைக்கான ஆயத்தங்கள் தொடங்கிவிடும். தாய்மார் தம் கைப்பட பலகாரங்கள் செய்வார்கள். இளம் பெண்கள் கைகளில் மருதாணி பூசிக்கொள்வார்கள். வீட்டிலிருக்கும் ஆண்கள், கடை கடையாக ஏறி, இறங்கி குடும்பத்தாருக்குத் தேவையான புத்தாடைகள், பட்டாசுகளை வாங்கி வருவார்கள். தீபாவளி நாளன்று அதிகாலையில் கண் விழித்ததும் முதலில் உடம்பு முழுக்க எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள். இன்றைக்கு இவை எல்லாமே மெள்ள மெள்ள வழக்கொழிந்துவருகின்றன. சிலர் மட்டுமே சம்பிரதாயத்துக்காக  அவற்றைப் பின்பற்றிவருகிறார்கள். தீபாவளிக் கொண்டாட்டத்தில் முக்கியமான ஓர் அங்கம் எண்ணெய்க் குளியல். இது கட்டாயம் எல்லோரும் பின்பற்றும் ஒரு வழிமுறையாக இருந்து வந்திருக்கிறது. 

``தீபாவளியன்று அதிகாலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது `கங்கா ஸ்நானம்' என்று கூறப்படுகிறது. கங்கை நதியில் குளிப்பதற்கு இணையானதாக தீபாவளி எண்ணெய்க் குளியல் கருதப்படுகிறது. அதிகாலை வேளை, நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நேரம் என்பதாலும், அஞ்ஞானம் (இருள்) அகன்று மெய்ஞானம் (ஒளி) பிறப்பதை உணர்த்தும் வகையில் இருள் மறைந்து வெளிச்சம் தோன்றும் நேரம் என்பதாலும் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. 
`பாலுண்போம்; எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்' - நோயணுகா விதிகள் பற்றி தேரையர் எழுதிய புத்தகத்தில் இப்படிக் கூறப்பட்டிருக்கிறது. இதன்பொருள், `நாட்டு மாட்டின் பால் உணவை உண்போம்; நல்லெண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளிப்போம்’ என்பதே.


நம் பாரம்பர்யத்தில் எண்ணெய்க் குளியல் செய்தால், உடலை நோய் அணுகாமல் காத்துக்கொள்ளலாம்; அது, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதைத் தெரிந்துவைத்திருந்தார்கள். அதன் அடிப்படையில்தான் வாரத்துக்கு ஒருநாள் எண்ணெய்க் குளியல் செய்து ஆரோக்கியத்தை காத்துவந்தார்கள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது பல்வேறு வகையான உடல் உபாதைகளுக்குத் தீர்வாக அமையும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. பொதுவாக, எண்ணெய்க் குளியலுக்கு ஏற்றது நல்லெண்ணெய். அது இல்லாதபட்சத்தில்  தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். எண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்தவையாக சில நாள்கள் சொல்லப்படுகின்றன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.

உச்சந்தலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால், உடலில் உள்ள சூட்டைத் தணித்து குளிர்ச்சியடையச் செய்யும். எவ்வளவு சூடான உடல்வாகைக்கொண்டவராக இருந்தாலும், உச்சந்தலையில் எண்ணெய் தேய்த்துக்குளிப்பது நிச்சயம் பலன் தரும். முதலில் எண்ணெயை லேசாகச் சூடுபடுத்தி, உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். அதன்பிறகு உடலின் ஒவ்வொரு பாகத்திலும் மெதுவாகத் தேய்க்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து, சீயக்காய் போட்டு நன்றாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

எண்ணெய்க் குளியலின்போது, நல்லெண்ணெயில் சிறிது மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு, சின்ன வெங்காயம், உடைக்காத காய்ந்த மிளகாய் ஒன்று போன்றவற்றைப் போட்டு புகையாமல் காய்ச்சி உடலெங்கும் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு கடலை மாவு, பச்சைக் கற்பூரம், இரண்டு எலுமிச்சைப் பழச்சாறு ஊற்றி அரை மணி நேரம் ஊறவைத்த கலவையை உடல் முழுக்கத் தேய்த்து, கால் மணி நேரம் உலரவிட்டு இதமான வெந்நீரில் குளிக்க வேண்டும். இதையடுத்து பால் சாம்பிராணி, உலரவைத்த துளசி இலை, நிலவேம்புக் குடிநீருக்குப் பயன்படுத்தும் பொடி போன்றவற்றைத் தணலில் போட்டு புகை பிடித்தால் எந்த நோயும் நம்மை நெருங்காது. 
 

எண்ணெய்க் குளியல் செய்வதால் முடி கொட்டாது; முடி நன்றாக வளர உதவும்; இளநரை வராது. உடல் சூடு தணிந்து, புத்துணர்ச்சி கிடைக்கும்; நரம்புகளின் செயல்பாடு அதிகரிக்கும். திருமணமான தம்பதிகளுக்கு இல்லற இன்பம் அதிகரிக்கும். சளி, தலைவலித் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். ஆரோக்கியமான தூக்கம் வர வழிவகுக்கும். இவற்றை நம் வாழ்வில் கடைப்பிடிப்பதன் மூலம் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழலாம்.


சருமம் மற்றும் கூந்தலுக்கு எண்ணெய்ச் சத்து அவசியம். இயல்பிலேயே மிதமான கொழுப்பும் எண்ணெய்ச் சுரப்பும் இவை இரண்டிலும் இருந்தாலும், அவற்றை தக்கவைத்துக்கொள்ள எண்ணெய் தடவுவது மற்றும் மசாஜ் செய்து குளிக்கவேண்டியது அவசியம். உடல் முழுக்க எண்ணெய் தடவி, மசாஜ் செய்தால் உடலில் உள்ள ஈரப்பதம் காக்கப்படும்; உடல் பொலிவு அதிகரிக்கும். பாதங்களில் எண்ணெய் தேய்ப்பதன் மூலம் பார்வைத்திறன் அதிகரிக்கும்; கண் கோளாறுகள் நீங்கும். 


குழந்தை பிறப்புக்குப் பிறகு வரக்கூடிய தழும்புகள் மறைய ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) பயனுள்ளதாக இருக்கும். ஆகவே பெண்கள் ஆமணக்கு எண்ணெயைத் தேய்த்துக் குளிப்பது நல்லது. எண்ணெய் தேய்க்கும்போது கட்டைவிரல்களில் எண்ணெய் வைப்பதன் மூலம் கைகள் மற்றும் கால்களில் ஏற்படும் வலிகள் நீங்கும். மனஅழுத்தம் குறைந்து மனதில் அமைதி பிறக்கும். 


ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்குச் சுத்தமான தேங்காய் எண்ணெயை வாரத்துக்கு ஒருநாளாவது உடல் முழுக்கத் தடவிவிட்டு, வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டுவது நல்லது. ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சனிக்கிழமைகளில் உடல் முழுக்க நல்லெண்ணெய் தேய்த்து, சிறிது நேரம் ஊறவிட்டுக் குளிப்பாட்ட வேண்டும்.

எண்ணெயை நன்றாக அழுத்தித் தேய்த்தால், அது சருமத்தில் உள்ள அடுக்குகளுக்குள் சென்று பல்வேறு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். வியர்வையால் சருமத்தில் ஏற்பட்ட அழுக்குகளையும், மிகவும் நுட்பமான அடைப்புகளையும் எண்ணெய்க் குளியல் நீக்கிவிடும்.  

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்?

”தீபாவளி அன்று குளிப்பதை கங்காஷ்டகம் என்பார்கள். அதாவது அன்று மக்கள் வெந்நீரில் தான் குளிப்பார்கள். வெந்நீரில் கங்காதேவி வருவதாக ஒரு ஐதீகம். பொதுவாக வீட்டில் அசுபம் நடந்தால், பெரியவர்கள் இறந்தால், எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம்.

குறிப்பாக மக்கள் நல்லெண்ணெயில் குளிப்பார்கள். நல்லெண்ணெய் எள்ளில் இருந்து வருகிறது. எள்ளில் மகாலட்சுமி இருக்கிறார். எனவே, சுத்தமான நல்லெண்ணெய் தேய்த்து மக்கள் குளிக்க வேண்டும்.

தீபாவளிக்கு எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்?

அதே நேரம், தீபாவளி அன்று அமாவாசை வந்தால் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. இந்த ஆண்டு சதுர்த்தசி நவ.7 இரவு முதல் நாளை காலை 11:00 மணி வரை இருக்கிறது. அதன் பிறகு தான் அமாவாசை வருகிறது. எனவே, இந்த ஆண்டு காலையில் எண்ணெய் சேர்த்து குளிக்கலாம்.

ஒருவேளை தீபாவளி அன்று காலையில் அமாவாசை வந்தால் வெறும் வெண்ணீரில் மட்டும்தான் குளிக்க வேண்டும். மக்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.

இன்று காலை 6.10-க்கு சூரிய உதயம் வருகிறது. சூரிய உதயம் முன்பு குளிக்க முடியாதவர்கள் 6.10-இல் இருந்து காலை 11 மணிக்குள் எண்ணை தேய்த்து குளிக்கலாம். அதன்பின் இனிப்பு, பலகாரம், புத்தாடைகள் உடுத்தி பண்டிகையை கொண்டாடலாம்.

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது ஏன்?

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க வேண்டும் என்று பொதுவாக சாஸ்திரத்தில் கூறவில்லை. தீபாவளி அன்று மத்தாப்பு தான் ஆரம்பத்தில் காட்டுவார்கள். மத்தாப்பு என்பது ஒளி. அந்த ஒளி மூலமாக நரகாசுரனின் ஆத்மா தேவலோகத்திற்கு செல்ல வேண்டும், விஷ்ணு பாதத்திற்கு செல்ல வேண்டும், சொர்க்க லோகத்திற்கு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.