“‘ஜெ’ எழுதில் தொடங்கும் விஜயின் அடியாள் பல பெண்களை சீரழிக்கிறார்”- திவ்யா சத்யராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு
பெரிய நடிகர்களுடன் நடிக்க வைப்பதாக கூறி பலரின் வாழ்வை கெடுத்துள்ளார் ஜெ என்ற எழுத்தில் துவங்கும் முதலமைச்சரின் அடியாள் என திவ்யா சத்யராஜ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழகத்தில் தற்பொழுது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சி.ஜே.விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக, பிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான சத்யராஜின் மகளும், திமுகவின் நட்சத்திரப் பேச்சாளருமான திவ்யா சத்யராஜ் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ், “முதலமைச்சர் விஜய்க்கு ஒரு அடியாள் உள்ளார்.அவர் சமூக வலைதளங்களில் மாபியாக்களை உருவாக்கி பெண்களை அவதூறாக பேச வைக்கிறார். அந்த அடியாள் பெரிய கனவோடு சினிமாவில் நடிக்க வருபவர்களை சினிமாவில் வாய்ப்பு தருகிறேன் எனக் கூறி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. பெரிய நடிகர்களுடன் நடிக்க வைப்பதாக கூறி ஜெ என்ற எழுத்தில் தொடங்கும் முதலமைச்சரின் அடியாள் பலரின் வாழ்வை கெடுத்துள்ளார். தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல் சமூக வலைதளங்களில் தங்களை விமர்சிப்பவர்களை 3 மணி நேரத்திற்குள் தேடி பிடித்து கைது செய்வது போன்ற விளம்பர அரசியலில் மட்டுமே வேகம் காட்டிவருகிறது. மக்களாட்சியில் விமர்சனங்களை எதிர்க்கொள்ளும் பக்குவம் அரசுக்கு வேண்டும்.” என்றார்.