×

மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்: "இது நீதிக்கு எதிரானது" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம்!

 

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

காஞ்சிபுரத்தில் பணியாற்றி தற்போது அரியலூர் முதன்மை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கம் நீதிக்கு எதிராக உள்ளது.

மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் தன்னிடம் வரும் வழக்குகளில் வழக்காடிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா அல்லது இல்லையா என்பதைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டிருப்பின் அவர்கட்கான சட்டப்படியான நிவாரணத்தை தொடர்ந்து 26 ஆண்டுகளாக நீதிக்கு உட்பட்டு வழங்கி வந்தவர். பல்வேறு வழக்குகளை அவர் கையாண்ட விதம் நீதித்துறை வழக்கறிஞர்கள் மற்றும் பொது ஜன மக்களால் பாராட்டுகள் பெற்றது.

காஞ்சிபுரத்தில் 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த காவல் மரண வழக்கில் இறந்துபோனவரின் மனைவிக்கு மாத ஓய்வூதியமும், மனைப்பட்டாவும், அவரது மகளுக்கு அலுவலக உதவியாளர் பணியும் வழங்கப்பட காரணமாய் அவரது உத்தரவு இருந்து உள்ளது. காவல் மரண வழக்குகள், காவல் நிலைய சித்ரவதை வழக்குகள் திறம்பட சட்டப்படி கையாண்டு சாமானியமக்களுக்கு நீதியை நிலை நாட்டினார்.

காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வழக்கில் அவர் தனது கடமையைச் சரிவர ஆற்றாத நிலையில்தான் அவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினார் நீதிபதி செம்மல். இது குறித்து துணைக் கண்காணிப்பாளர் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், உத்தரவு பிறப்பித்த விசாரணை நீதிமன்ற நீதிபதி செம்மலுக்கு அறிவிப்பு அனுப்பி விளக்கம் கோரப்படாமலேயே நீதிமன்ற விஜிலென்ஸ் குழு நீதிபதி ப.உ.செம்மலுக்கு எதிராக பணியிட நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒருதலைப் பட்சமான நடவடிக்கை ஆகும். நீதித்துறையில் இவ்வாறு முறையான விசாரணை இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டால், பிறத்துறையில் இருக்கின்றவர்கள் நீதித்துறையை நாடுவதற்கு அச்சத்தை ஏற்படுத்தும். ஆகவே நீதித்துறை, நீதிபதி ப.உ.செம்மல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை உடனே ரத்து செய்து நீதித்துறையின் நேர்மையை நிலை நாட்ட வேண்டும்.

நீதித்துறையில் சாமானியர்களுக்கு நீதி வழங்கி வருகின்ற நீதிபதிகளுக்கு செம்மல் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை நேர்மையாக நீதி வழங்குவதில் அச்சத்தை ஏற்படுத்தி சாமானியர்களுக்கு கிடைக்கக்கூடிய நீதி கிடைக்காமல் செல்ல வாய்ப்பு உள்ளது.

ஆகவே தமிழகத்தில் நேர்மைக்கும், சட்டத்திற்கும், நீதிக்கும் உட்பட்டு செயல்படுகின்ற செம்மல் போன்ற பல நீதிபதிகளுக்கும் நீதித்துறை உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நீதித்துறையை வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.