×

விஷால் நடிச்ச 40 நாள் ஷூட்டிங்க அப்படியே தூக்கி போட்ட இயக்குநர் பாலா! ரகசியத்தை உடைத்த நடிகர் ஆர்யா..!

 

விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படம்  ‘அவன் இவன்’.இந்நிலையில், அந்தப் படத்தின் உருவாக்கத்தின் போது நடந்த ஆச்சரியமான சம்பவம் ஒன்றை நடிகர் ஆர்யா சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

ஆர்யாவின் கூற்றுப்படி, படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பில் அவருக்கு பிற படங்களின் பணிகள் இருந்ததால், விஷால் தொடர்பான காட்சிகளை முதலில் படமாக்க இயக்குநர் பாலா முடிவு செய்திருந்தார். அதன்படி சுமார் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

பின்னர் ஆர்யா படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தபோது, அங்கு விஷால் இல்லாததை கவனித்து பாலாவிடம் காரணம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பாலா, “இதுவரை எடுத்த காட்சிகளில் விஷால், கதாபாத்திரமாகத் தெரியவில்லை; விஷாலாகவே தெரிகிறார். அதனால் கதாபாத்திரத்திற்கேற்ற தோற்ற மாற்றத்திற்காக அவரை சென்னைக்கு அனுப்பியுள்ளேன்” என்று கூறியதாக ஆர்யா தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட ஆர்யா, ஏற்கனவே 40 நாட்கள் எடுத்த காட்சிகள் என்ன ஆனது என்று கேட்டபோது, அந்த முழு ஷூட்டிங்கையும் பாலா நிராகரித்து மீண்டும் புதிதாக தொடங்க முடிவு செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார். கதாபாத்திரத்தின் முழுமையான நம்பகத்தன்மைக்காக 40 நாட்கள் உழைப்பையே தியாகம் செய்ய பாலா தயங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ‘நான் கடவுள்’ திரைப்படத்திற்குப் பிறகு தனது அடுத்த படமாக இரண்டு ஹீரோக்கள் கொண்ட கதையை பாலா ஆர்யாவிடம் கூறியதாகவும், மற்றொரு நடிகரைத் தேடியபோது விஷாலின் பிறந்தநாள் விழாவில் இந்தக் கதையைப் பற்றி பேச, அவர் உடனடியாக ஒப்புக்கொண்டதாகவும் ஆர்யா நினைவுகூர்ந்தார். அதன்பின் பாலாவுக்கு அழைத்து, “ஒருத்தன் சிக்கிட்டான்” என்று நகைச்சுவையாக கூறிய சம்பவத்தையும் பகிர்ந்தார்.

பாலாவின் இயக்கத்தில் உருவான ‘அவன் இவன்’ திரைப்படத்தில் விஷால், ஆர்யாவுடன் ஜி.எம். குமார், மது ஷாலினி, ஜனனி ஐயர், அம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குறிப்பாக விஷாலின் வித்தியாசமான தோற்றமும், ஆர்யாவின் இயல்பான நடிப்பும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று, படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.