×

திண்டுக்கல்லில் பரபரப்பு: 10 நாட்களாக தேடப்பட்ட இளைஞர் குவாரிக்குள் சடலமாக கண்டெடுப்பு..!

 

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை அடுத்துள்ள சரளைபட்டியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில், சில மாதங்களாக சரளைபட்டியை சேர்ந்த மூக்கன் மகன் கருப்பசாமி (வயது 25) என்ற வாலிபார் சுற்றித்திரிந்த நிலையில் 10 நாட்களுக்கு முன் காணாமல் போனாதாக உறவினர்கள் தேடி வந்ததார். அவர் மனநலம் குன்றியவர் என சொல்லப்படுகிறது. குவாரியில் சென்றுகேட்டபோது இங்கெல்லாம் வரவில்லை என்று சொன்னதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 22) குவாரியில் எம். சாண்ட் குவித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தரைப்பகுதியிலிருந்து 10 அடி ஆழத்தில் கருப்பசாமியின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை கண்டறிந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள், உறவினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர், நத்தம் காவல்ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து, கருப்பசாமியின் உறவினர்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போன கருப்பசாமியின் உடல் எப்படி கல்குவாரிக்குள் வந்தது? கல்குவாரியில்தான் அவர் இறந்தாரா? இறப்பின் பின்னணியில் ஏதேனும் காரணம் இருக்கிறதா? கருப்பசாமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவர் தற்செயலாக இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்றார்களா? என்பது குறித்த பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கல்குவாரியானது கடந்த மாதம் கல்குவாரியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தாக்கிய ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் மகனுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்தசூழலில் அதிமுக அறிக்கையில் திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் பெயரை குறிப்பிட்டு நடவடிக்கை வேண்டும் என பதிவிட்டுள்ளது.

தங்களுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அதிமுக, “ஸ்ரீரங்கம் திமுக MLA பழனியாண்டியின் மகன் விஜயபாரதிக்கு சொந்தமான குவாரி ஒன்றில், திண்டுக்கல் மாவட்டம் சரளைப்பட்டியில் 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

ஏற்கனவே, தனக்கு சொந்தமான குவாரியில் சட்டவிரோத நடவடிக்கை இருப்பதாக வந்த குற்றச்சாட்டு குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மற்றும் கேமராமேன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி, தனது திமுக ஆளுங்கட்சி பலத்தால் மறைக்க முயன்றவர் தான் இந்த குண்டரும், திமுக MLA-வுமான பழனியாண்டி.

மறுபடியும் அவர் மகனுக்கு சொந்தமான குவாரியில் ஒரு சடலம் என்பது பல்வேறு கேள்விகளை மக்களிடையே எழுப்புகிறது.

எந்த பாரபட்சமும் பாராமல், இளைஞர் கருப்பசாமியின் மரணம் குறித்து சட்டப்பூர்வமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளது.