×

ஆவின் பால் கிடைக்கவில்லையா? பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்!

 

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக ‘ஆவின்’ நிறுவனம் பால் கொள்முதல் செய்து விநியோகித்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை நாள் ஒன்றுக்குச் சுமார் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பால் வரத்து 25 லட்சம் லிட்டராக சரிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆவின் நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை. தற்போது ஆவின் சார்பில் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.35-ம், எருமை பாலுக்கு ரூ.45-ம் கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது.

ஆனால், தனியார் பால் நிறுவனங்கள் ஆவினை விட லிட்டருக்கு ரூ.3 கூடுதலாக வழங்கி வந்த நிலையில், சமீபத்தில் மேலும் ரூ.4 உயர்த்தியுள்ளன. இதன் மூலம் தற்போது தனியார் நிறுவனங்கள் பசும்பால் ஒரு லிட்டருக்கு ரூ.42 என்றும், எருமை பால் ஒரு லிட்டருக்கு ரூ.60 என்றும் கொள்முதல் செய்கின்றன. இதனால், பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்குப் பால் வழங்க ஆர்வம் காட்டி வரும் சூழல் உருவாகியுள்ளது.

கொள்முதல் குறைந்ததன் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் கடந்த ஒரு மாதமாகவே ஆவின் பாலுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

காலை நேரங்களில் பெரும்பாலான கடைகளில் ஆவின் பால் கிடைப்பதில்லை என்றும், பாலின் தரம் குறைந்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், கடந்த இரண்டு மாதங்களாகப் பச்சை நிற பால் பாக்கெட்டுகளுக்கு (நிலைப்படுத்தப்பட்ட பால்) தட்டுப்பாடு நிலவுவதால், ஆவின் பாலை நம்பியிருக்கும் குடும்பங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன.

மேலும் ஆவின் பால் கிடைக்காததால் தேநீர் கடை உரிமையாளர்களும், உணவக உரிமையாளர்களும் தனியார் நிறுவனங்களின் பாலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, தனியார் நிறுவனங்களுக்கு இணையான விலையை ஆவின் நிறுவனமும் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்தி பால் வரத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பொதுமக்களுக்குத் தட்டுப்பாடின்றிச் சீரான முறையில் பால் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என நுகர்வோரும், விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.