Protocol-ஐ மீறினாரா விஜய்? கருப்பு சட்டையில் முதல்வர்!
பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்திற்கு வந்த தமிழக முதல்வர் விஜய் அணிந்திருந்த உடை, அரசியல் வட்டாரத்தை விட சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
பொதுவாக பிரதமரை வரவேற்கும் போது தமிழக முதல்வர்கள் பாரம்பரிய வெள்ளை சட்டை, வேட்டி அல்லது வெள்ளை சட்டையில் தோன்றுவது வழக்கம். ஜெயலலிதா, கருணாநிதி, எடப்பாடி, ஸ்டாலின் என அனைவரும் இந்த மரபை கடைபிடித்தனர். ஆனால் இன்று முதல்வர் விஜய், அடர் நீலம் கலந்த கருப்பு நிற முழுக்கை சட்டையில் வந்து பிரதமருக்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். பிரதமர் மோடி வழக்கம் போல் வெள்ளை சட்டை, நீல நிற வாஸ்கட்டில் இருந்தார்.
முதல்வர் விஜயின் உடை திடீர் முடிவு அல்ல. கடந்த மே 10-ம் தேதி முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்தே விஜய் கருப்பு சூட், கருப்பு-வெள்ளை காம்பினேஷன் உடைகளையே தனது அடையாளமாக்கி வருகிறார். இது குறித்து திருச்சியில் நடந்த முதல் பொதுக்கூட்டத்தில் அவரே விளக்கம் அளித்திருந்தார். "ஏன் நாம கோட் சூட் போடக்கூடாதா? அது பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு மட்டும் தானா? நான் பல கலர்கள் போடல. வெறும் கருப்பு-வெள்ளை தான். நம்ம மனசு மாதிரி வெளிப்படையாக, எளிமையாக இருக்கவே இந்த நிறம்." எனக் கூறியிருந்டார்.
விஜய் ரசிகர்கள் "இது தான் ஸ்வாக், தமிழக அரசியலில் புதுமை" என்று கொண்டாடி வருகின்றனர். "கறை வேட்டி கலாச்சாரத்தை ஒழித்துவிட்டார்" என்கிறார்கள். அதே நேரம் எதிர் தரப்பினர், "கருப்பு துக்கத்தின் அடையாளம், அரசு நிகழ்வில் வெள்ளை உடை தான் மரபு" என்றும், "பிரதமரை சந்திக்க பட்டன் திறந்து பனியன் தெரிய சட்டை அணிவதா?" என்றும் முன்பு டெல்லி சந்திப்பின் போது விமர்சித்தது போல் இப்போதும் விமர்சிக்கின்றனர். ஆனால் புரோட்டோகால் படி, முதல்வர் எந்த நிற உடை அணியலாம் என்று விதி இல்லை. வரவேற்பு தான் முக்கியம். அந்த வகையில் முதல்வர் விஜய், பிரதமர் மோடியை தோளில் தட்டி, சிரித்தபடி வரவேற்ற காட்சி, இன்றைய நாளின் மிக முக்கியமான அரசியல் படமாக மாறியுள்ளது.