உண்மையிலேயே காவலர் தேவநாதன் கையை உடைத்தார்களா தவெகவினர்..? நடந்தது என்ன..? காவல்துறை விளக்கம்..!
பிரபல தமிழ் ஊடகம் ஒன்றில் வந்த செய்தியில், "தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நால்ரோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகச் சாலையின் குறுக்கே தவெகவினர் பேனர்களை வைத்து, இடைஞ்சல் ஏற்படுத்தினாராம். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற காவலர் தேவேந்திரன் பேனரை அகற்ற முயன்றுள்ளார். அப்போது தவெக வார்டு உறுப்பினர்களான அருண், காளி இருவரும் காவலர் தேவேந்திரனைத் தாக்கியுள்ளனர். இதில், அவருடைய வலது கையின் மணிக்கட்டு பகுதி எலும்பு முறிந்தது என செய்தி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில்,இந்த செய்தியை தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில் கூறுகையில்,
கடந்த மே 23, 2026 அன்று, உள்ளூர் தெருத் திருவிழாவிற்காக பேனர்கள் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இருவருக்கும், ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கும் இடையே போக்குவரத்து இடையூறு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை வைத்து, காவலர் தேவதானின் கை முறிந்ததாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால், காவலர் தேவதானுக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை என்றும், அந்த நபர்கள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல என்றும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பரப்புவது பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்குகிறது. எந்தவொரு தகவலையும் அதன் உண்மைத்தன்மையை அறியாமல் பகிர்வது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற வதந்திகளைக் கண்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டும் நம்புமாறும் தஞ்சாவூர் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பொறுப்பற்ற முறையில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் எச்சரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
— Thanjavur District Police (@ThanjavurPolice) May 28, 2026