×

எம்எல்ஏ பொய் கூறினாரா? சபரி ஐங்கரனை சிக்கவைத்த சட்டமன்ற பேச்சு..!
 

 

காதல் விவகாரத்தை பேசி சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் கவனத்தை ஈர்த்த பெரியகுளம் எம்எல்ஏ சபரி ஐங்கரன்
தனக்கு சொந்தமாக கார் இல்லை எனக் கூறியது பொய் என விமர்சனம் என சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 
தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கார் இருப்பதாக குறிப்பிட்டுள்ளதையும், காரில் வந்து இறங்கும் ரீல்ஸ்களை சுட்டிக்காட்டியும் கேள்வி எழுப்பி வருகின்றனர் 


சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கி வாகனத்திற்கான பராமரிப்பு தொகையாக 75 ஆயிரம் ரூபாயும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான உதவி பணியாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் அறிவித்து உத்தரவிட்டிருந்தார்

முதலமைச்சரின் இந்த உத்தரவை வரவேற்று தேனி மாவட்ட பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் தமிழ்நாடு முதலமைச்சரை பாராட்டி பேசியபோது, “புதிய எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கிய முதலமைச்சருக்கு மிக்க நன்றி. நான் கல்லூரியில் படித்தபோது எனக்கு காதல் தோல்வி ஏற்பட்டது. அப்போது வேலையும் இல்லை காரும் இல்லை. ஆனால் இப்போது வேலையும் கொடுத்து காரையும் கொடுத்துள்ள முதலமைச்சருக்கு நன்றி.

நான் எனது ஊரிலிருந்து சென்னைக்கு ரயிலில் தான் வருகிறேன். சட்டப்பேரவை வளாகத்திற்குள் ஆட்டோவில் வரும்பொழுது காவல் பணியாளர்கள் என்னை நிறுத்தி யார் நீங்கள்? என்று கேட்பார்கள். நான் எம்.எல்.ஏ என்று சொல்லி, ஐ.டி காடை காண்பித்தாலும் நம்ப மாட்டார்கள்” என்று பேசினார். அவருடைய பேச்சு அவையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு, அவர் பேசும்போதே முதலமைச்சர் அவரை ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தார்.

அவரிடம், நீங்கள் ஏற்கனவே கார் வைத்திருப்பதாகவும் ஆனால் ஆட்டோவில் வருவதாகவும் சட்டப்பேரவையில் கூறியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி உள்ளதே. இதற்கு உங்கள் பதில் என்ன? என செய்தியாளர்கள் கேள்வியை முன் வைத்தனர். ஆனால் அதற்கு பதிலளிக்காமல் ‘ப்ளீஸ்’ என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

ஆனாலும் செய்தியாளர்கள் அவரை விடாமல், தேர்தல் பிரமாண பத்திரத்தில் 30 லட்சம் ரூபாய் ரொக்கம் நிரந்தர டெபாசிட் இருப்பதாக காண்பித்துள்ளீர்கள். இதற்கு உங்கள் பதில் என்ன? என்ற கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த சபரி ஐங்கரன், “நான் 450 கிலோமீட்டர் தூரத்திலிருந்து வருகிறேன். எனக்கு தூரம் அதிகம். உள்ளதை தான் சொல்லியுள்ளேன். சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்தார்.


அதேசமயம், தனது தொகுதிக்குள் ‘எம்எல்ஏ’ என்ற போர்டு பொருத்திய காரில் வலம்வரும் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன், அதனை ரீல்ஸாக எடுத்து தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட தனது பிரமாண பத்திரத்தில் தனக்கு சொந்தமாக 2023ஆம் ஆண்டு வாங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார், இரண்டு பைக்குகள் உள்ளிட்ட 72 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பீடு இருப்பதாக காட்டியுள்ளார்.

சட்டமன்றத்தில் தன்னிடம் கார் இல்லை என உண்மைக்கு மாறாக பேசியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய பேச்சுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.