×

நெல்லையப்பர் கோவிலில் உணவு கொடுக்காமல் நரிக்குறவ சிறுவர்கள் விரட்டியடிப்பா?- வைரலாகும் வீடியோ

 

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நெல்லையப்பர் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. அதில் நரிக்குறவ சமூக சிறுவர்களை உண்ண அனுமதிக்காததால், சமூக சேவகர் ஒருவர் அருகில் இருந்த ஓட்டலில் அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். 


நெல்லை நெல்லையப்பர் கோவிலில் நேற்று அண்ணா நினைவு தின பொதுவிருந்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு, மேயர் ராமகிருஷ்ணன் கோவில் நிர்வாகத்தினர் பங்கேற்று பொதுமக்களோடு மக்களாக உணவருந்தனர். நிகழ்ச்சியும் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து நெல்லை பேட்டை பகுதியைச் சேர்ந்த டேவிட் என்பவரது முகநூல் சமூக வலைதள பக்கத்தில் பேட்டை பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் சிறுவர் சிறுமிகளுக்கு நெல்லையப்பர் கோவிலில் நடைபெற்ற பொது விருந்தில் உணவு தர மறுத்து விட்டனர். அவர்களுக்கு நெல்லை பேட்டை பகுதியைச் சேர்ந்த டேவிட் என்பவர் உணவு வாங்கி தனியார் ஓட்டலில் கொடுத்ததாககூறி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. 

இது சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் கோயில் நிர்வாகம் குறித்து கண்டன குரல் எழுப்பினர். இதனால் நெல்லையப்பர் கோவில் குறித்து அவதூறான கருத்துகள் வெளியானது. கோவில் நிர்வாகம் சார்பில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. வேண்டுமென்றே கோவில் குறித்து அவதூறு பரப்புகின்றனர் என மறுப்பு தெரிவித்தனர். இன்று கோயில் நிர்வாகத்தினர் இதுகுறித்து தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நெல்லையப்பர் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராக்கள் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது.  அதில் குறிப்பிட்ட டேவிட் என்ற நபர் 4 சிறுவர் சிறுமிகளை அழைத்துக் கொண்டு உள்ளே வருவதும் அப்போது கோயில் நிர்வாகத்தினர் உணவு முடிந்து விட்டது எனக்கூறி மீண்டும் வெளியில் அனுப்பப்பட்டனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. கோயில் நிர்வாகம் தரப்பில் நேற்று மதியம் 1:50 மணிக்கு பொதுவிருந்து முடிவடைந்த நிலையில் டேவிட் என்பவர் நரிக்குறவர் இன சிறுவர் சிறுமிகளை உணவு சாப்பிட அழைத்து வந்ததும் உணவு தீர்ந்து விட்டது என்று ஊழியர்கள் கூறியதாகவும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

null


தற்பொழுது நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய டேவிட் என்பவர் மீது நெல்லை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது கோயில் நிர்வாகத்தினர் சார்பில் அதற்கான ஆதாரமாக இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்.