திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்தாரா கே.என்.நேரு?
ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில், நாள்தோறும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னப்பிரசாதம் அறக்கட்டளை மூலம் மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்த அன்னதான சேவைக்கான ஒரு நாள் முழு செலவான ரூ.44 லட்சத்தை நன்கொடையாக வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தனது பிறந்த தினமான நவம்பர் 9-ம் தேதியன்று, இந்த ஒரு நாள் அன்னதானத்திற்கான முழு செலவையும் அமைச்சர் கே.என். நேரு ஏற்றுக்கொண்டு, அதற்கான தொகையை தேவஸ்தானத்திடம் வழங்கியுள்ளார். இதை தொடர்ந்து, திருப்பதியில் உள்ள அன்னதான கூடத்தின் டிஜிட்டல் பலகைகளில், 'இன்றைய உபயதாரர் கே.என். நேரு' என்ற அறிவிப்பு இடம்பெற்றது.
காலை ரூ.10 லட்சம், மதியம் ரூ.17 லட்சம் மற்றும் இரவு ரூ.17 லட்சம் என மூன்று வேளைக்கான அன்னதான செலவை தேவஸ்தானத்திடம் முன்கூட்டியே கொடுத்து விட வேண்டும். நன்கொடையாளர் ஒரு குறிப்பிட்ட நாளில் அன்னதானம் வழங்க நன்கொடை (ரூ.44 லட்சம்) அளித்தால், அவர் பெயரும் கோயிலைச் சுற்றியுள்ள காட்சிப் பலகையில் காண்பிக்கப்படும்.
அந்த வகையில் நேற்று (9ம் தேதி) திமுகவின் மூத்த தலைவரும், தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு திருப்பதி திருமலை கோயிலில் அன்னதானம் வழங்கியுள்ளார்.
இதற்காக அவர் ரூ.44 லட்சம் கொடுத்த நிலையில், 'இன்றைய நாள் (09.11.2025) நன்கொடை வழங்கியவர் கே.என்.நேரு' என்று நேற்றைய தினம் திருப்பதி திருமலை அன்னதான அரங்கில் உள்ள டிஜிட்டல் போர்டுகளில் அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று கே.என்.நேருவின் பிறந்தநாள் என்பதால் அவர் அன்னதானத்துக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.
திமுக தலைமை தந்தை பெரியாரின் 'கடவுள் மறுப்பு' கொள்கையை இறுகப்பற்றிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவர் உலகப்புகழ் பெற்ற கோயிலுக்கு ரூ.44 லட்சத்தை அள்ளிக்கொடுத்துள்ளது நெட்டிசன்களின் கிண்டலுக்கு வழிவகுத்துள்ளது.
இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழத் தொடங்கின. "தந்தை பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறும் திமுகவினர், இப்படி உலகின் பணக்கார கோயிலுக்கு பல லட்சங்களை அள்ளி கொடுப்பது எந்த வகையில் சரி?" என்று பலரும் கேள்வி எழுப்பினர். மேலும், "திமுக தலைவர்களான முதல்வரும், துணை முதல்வரும் சனாதனத்தை கடுமையாக எதிர்க்கின்றனர்; இந்து பண்டிகைகளுக்கு கூட வாழ்த்து சொல்வதில்லை. ஆனால், கட்சியின் மூத்த அமைச்சரே இப்படி செய்வது கொள்கை முரண்பாடு இல்லையா?" என்றும் நெட்டிசன்கள் விமர்சித்தனர். "இந்த பணத்தை ஏழை எளிய மக்களின் நலத்திட்டங்களுக்கு அளித்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும்," என்ற கருத்தும் பரவலாகப் பகிரப்பட்டது.
மேலும், ''பெரியாரின் கொள்கை எந்த காலத்துக்கும் பொருந்தும். சமூக நீதிக்கு வழிவகுக்கும் என திமுக தலைவர்கள், நிர்வாகிகள் பக்கம் பக்கமாக வசனம் பேசுகின்றனர். வசனத்துக்கு மட்டும் பெரியார் கொள்கை. ஆனால் நிஜத்தில அவர்கள் அப்படி இல்லை. இப்படி கோயிலுக்கு ரூ.44 லட்சம் அள்ளிக்கொடுப்பது தான் திராவிட மாடலா?'' என ஒரு சிலர் கேள்வி எழுப்பினர்.
அதெ வேளையில் கே.என்.நேருவின் செயலை நியாயப்படுத்தும் திமுகவினர் சிலர், ''திமுக எந்த மதத்துக்கும் எதிரியில்லை. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவதற்குதான் எதிரி. திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் எவரும் தங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றலாம். இதுதான் திராவிட மாடல்.
ஏன் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினே எந்த அளவுக்கு பக்தியுள்ளவர் என்பது ஊரறிந்த விஷயம். ஆகவே திமுக எந்த மதத்துக்கும் எதிரி கிடையாது. யார் மத விஷயத்திலும் தலையிடாது. மூடநம்பிக்கைகள், மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தும் சக்திகளுக்கு தான் திமுக எதிரி'' என்று தெரிவித்துள்ளனர்.