“ஆதரவாக இருப்பார் என நம்பியவரா இப்படி செய்தார்?” – கணவரை பிரிந்து தவித்த பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடிய வக்கீல்!
நாகர்கோவில் அருகே ஈசாந்திமங்கலம் பகுதியில் 42 வயதான பெண் ஒருவர், கணவரிடம் இருந்து பிரிந்து மகனுடன் வசித்து வருகிறார். அவரது கணவர், திருமணமான தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்த சூழலில், கணவன்- மனைவி இடையே சொத்துகள் தொடர்பாகப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பிரச்சனைக்கு தீர்வுக் காணும் நோக்கில் அந்த பெண், அதே பகுதியில் உள்ள வழக்கறிஞர் ரெஜினால்டு என்பவரிடம் உதவி நாடினார். இவரது குடும்பப் பிரச்சனையை நன்றாக அறிந்த திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரெஜினால்டு பெண்மணிக்கு உதவுவதுபோல் நன்றாகப் பழகியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் காவல்துறையில் பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவலரான தனது தம்பியான சைலஸ் என்பவரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு பெண்மணியின் சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் உங்கள் மகன் பெயரில் சொத்துகளை மாற்றித் தருவதாகக் கூறி வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றதுடன், பெண்ணின் சொகுசு காரையும் வாங்கி உள்ளனர்.
சம்மந்தப்பட்ட பெண்ணின் வீட்டில் அவருக்கு தெரியாமல் ரகசியமாகக் கேமராக்களைப் பொருத்தி ஆபாசமாகப் படம் மற்றும் வீடியோக்களை எடுத்து, அதனை பெண்ணின் பிரிந்து சென்ற கணவருக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளதாகவும் மிரட்டி உள்ளனர். இதையடுத்து, அந்த பெண் ரூபாய் 50 லட்சம் பணம் மற்றும் 40 சவரன் நகைகளைக் கொடுத்துள்ளார். மேலும், நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை எழுதிக் கொடுக்குமாறும் மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு சென்று அந்த புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமலும், எந்த நடவடிக்கையும், எடுக்காமலும் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.
இதனால் அந்த பெண், தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு புகார் அளித்துள்ளார். டிஜிபி உத்தரவின்பேரில் விசாரணை நடத்திய பூதப்பாண்டி காவல்துறை, முன்னாள் காவலர் சைலஸ் மற்றும் வழக்கறிஞர் ரெஜினால்டு ஆகியோர் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்குப்பதிவுச் செய்யப்பட்டிருந்த தகவலை அறிந்து வழக்கறிஞர் ரெஜினால்டு மற்றும் அவரது தம்பி ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.