×

"சர்வாதிகாரி இபிஎஸ்.. பச்சைத் தமிழன் நான்! - திமுகவில் இணைந்த முதல் நிமிடமே ஓபிஎஸ் அடித்த 'சிக்ஸர்'!"

 

'அதிமுகவை மீட்பேன்' எனத் தொடங்கிய தர்மயுத்தம் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று முறைப்படி திமுகவில் இணைந்தார். அதிமுக சார்பில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவர், அதன் பரம எதிரியான 76 ஆண்டு கால வரலாறு கொண்ட திமுகவில் இணைவது அரசியல் வரலாற்றில் இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.

அண்ணா அறிவாலயத்தில் அரங்கேறிய நிகழ்வு:

இன்று காலை அண்ணா அறிவாலயத்திற்குத் தனது மகன் ஓ.பி. ரவீந்திரநாத் மற்றும் முக்கிய ஆதரவாளர்களுடன் வந்த ஓபிஎஸ், திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இபிஎஸ் தரப்பு தன்னைத் தொடர்ந்து ஓரங்கட்டியதாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) உரிய இடம் கிடைக்காததாலும், வேறு வழியின்றித் தனது அரசியல் வாழ்வைத் தக்கவைக்க இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இபிஎஸ் மீதான காட்டமான விமர்சனம்:

திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியைச் சர்வாதிகாரி எனச் சாடினார். "இன்று அதிமுக அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் ஆணவப் போக்கால் அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். குறிப்பாகத் தென் மாவட்ட மக்களைப் புறக்கணிப்பதில் அவர் குறியாக இருக்கிறார். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அண்ணா மற்றும் கலைஞர் காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாட்டுடன் ஆட்சியை வழிநடத்துகிறார்," எனப் புகழ்ந்து தள்ளினார்.

"தொண்டனாகப் பணியாற்றுவேன்":

திமுகவில் தனக்கு என்ன பதவி கிடைக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், "நான் இந்த இயக்கத்தில் ஒரு சாதாரணத் தொண்டனாகவே இணைந்துள்ளேன். கட்சித் தலைமை இடும் கட்டளைகளை ஏற்று, திமுகவின் வளர்ச்சிக்கு உழைப்பேன். தேர்தலில் போட்டியிடச் சொன்னாலும் போட்டியிடுவேன். இது எவ்வித அழுத்தமும் இன்றி நான் எடுத்த சுயமான முடிவு," எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.