கண்ணாடி அலமாரியை உடைக்காமல் வைர நகைகள் மாயம்... CCTV-யில் சிக்கிய அந்தப் 'பகீர்' கொள்ளையன்..!
கர்நாடக மாநிலம் துமகூரு நகரின் காலடெக்ஸ் சந்திப்பு பகுதியில் உள்ளது ‘விஸ்வாஸ் ஜூவல்லர்ஸ்’. அந்த பகுதியில் ஓரளவு பிரபலமான இந்த கடையில், நேற்று வழக்கம் போல் காலையில் வியாபாரத்தை தொடங்க ஊழியர்கள் நகைப் பெட்டிகளை திறந்து இருப்பை சரி பார்த்தனர்.
அப்போது, முழுவதும் கண்ணாடி கதவுகளால் மூடப்பட்டிருந்த ஒரு அலமாரியின் உள்ளே வைக்கப்பட்டிருந்த வைர மோதிரங்களும், தங்கச் சங்கிலிகளும் காணாமல் போயிருப்பதை கண்டு ஊழியர்களின் பதறினர்.
கடையின் சுவர்களிலோ, பூட்டுகளிலோ எந்தவொரு உடைப்போ அல்லது கொள்ளை முயற்சி நடந்ததற்கான சுவடே இல்லை. 'உள்ளூர் ஆசாமிகள் யாராவது கைவரிசையை காட்டியிருப்பார்களோ?' என்ற சந்தேகத்தில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க முயன்றனர் ஊழியர்கள்.
ஆனால், அதன் உரிமையாளரோ நகைக் கடையை மேலும் ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு கொள்ளை நடந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லாததால் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை பார்க்க முடிவு செய்தார். அவருக்கு கடை ஊழியர்கள் மீதோ அல்லது வாடிக்கையாளர்கள் மீதோ சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அவர் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
பின்னர் உரிமையாளருக்கு கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஊழியர்கள் போட்டுக் காட்டினர். அப்போது அவர்கள் அனைவரும் நிமிடவாரியாக பார்த்துக் கொண்டே வந்தனர். அதிகாலை சுமார் 4 மணி அளவில் கேமராவில் பதிவான காட்சியைப் பார்த்த கடை உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் அவர்களது கண்களையே அவர்களால் நம்ப முடியவில்லை.
அந்த வீடியோவில் கடையின் மேற்புறத்தில் இருந்து கீழே 'டக்'கென குதித்த ஒரு பெரிய எலி, நேராக வைர நகைகள் இருந்த கண்ணாடி அலமாரியை நோக்கி சென்றது. அதன் அருகில் உள்ள ஒரு சிறிய துவாரத்தின் வழியாக உள்ளே நுழைந்த அந்த எலி மின்னல் வேகத்தில் அங்கிருந்த பளபளக்கும் வைர மோதிரங்கள் மற்றும் தங்கச் சங்கிலிகளை தன் கூர்மையான பற்களால் கவ்விக் கொண்டு, கேமராவுக்கு ‘டாட்டா’ காட்டி விட்டு தலைமறைவானது.
நகைகளின் ஜொலிஜொலிப்பை பார்த்து ஏதோ திண்பண்டம் என நினைத்த அந்த எலி, அதனை வாயில் கவ்விச் சென்றது சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவாகி இருந்தது.
கொள்ளையன் யார் என்று தெரிந்தவுடன், அடுத்து ‘ரெய்டு’ நடத்த கடையின் ஊழியர்கள் ஆயத்தமாயினர். எலி நகைகளை இழுத்துச் சென்ற பாதையை கண்டுபிடித்துச் சென்ற போது, கடையின் ஒரு மூலையில் இருந்த பெரிய எலி வளை சிக்கியது.
உடனே கடப்பாரை, மண்வெட்டிகளுடன் களமிறங்கிய ஊழியர்கள், அந்த வளைக்குள் கையை விட்டுத் தேடினர். அந்த எலி தனது படுக்கையறை போல பயன்படுத்தி வந்த வளைக்குள் 10 வைர மோதிரங்கள் மற்றும் 50 கிராம் எடையுள்ள 2 தங்கச் சங்கிலிகள் இருந்தன.
காவல் நிலையம் வரை செல்லவிருந்த வழக்கை, ஒரே ஒரு சிசிடிவி கேமரா காட்சி எலியின் வளைக்கே கொண்டு சென்று முடித்து வைத்தது.
மொத்த நகைகளும் எவ்வித சேதாரமும் இன்றி மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, நகைக்கடை உரிமையாளர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
இது தொடர்பாக பேசிய கடையின் உரிமையாளர், "இனிமேல் லாக்கரை விட எலி வலையை தான் நாங்க ஜாக்கிரதையாக பார்க்க வேண்டும். முதலில் நகையை காணவில்லை என்று ஊழியர்கள் வந்து கூறிய போது நான் நம்பவில்லை. மீண்டும் ஒரு முறை சரி பாருங்கள் என்று கூறினேன். நகை எப்படி திருடு போனது என்பது எங்களுக்கே பெரும் குழப்பமாக இருந்தது.
அப்போது ஒரு ஊழியர் ஒரு அலமாரியில் இருந்த மோதிரம் வேறொரு அலமாரியில் கிடக்கிறது என்றார். ஆனால், அதில் டேக் இல்லை என்றும் கூறினார். இதனையடுத்து கண்காணிப்பு கேமிரா காட்சிகளை நாங்கள் பார்க்க தொடங்கினோம். அப்போது தான் இது எலியின் வேலை என தெரிந்தது" என கூறினார்.