தர்மேந்திர பிரதான் ராஜினாமா : புதிய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்..!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தை அடுத்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவும் ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின் படி, புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய மத்திய அமைச்சரவையில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக உள்ள பிரகலாத் ஜோஷிக்கு, கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் தார்வாட் மக்களவைத் தொகுதியில் இருந்து தொடர்ந்து 5 முறை (2004, 2009, 2014, 2019, 2024) நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரகலாத் ஜோஷி.
2014-16 வரையிலான காலக்கட்டங்களில் கர்நாடகா மாநில பாஜக தலைவராகவும் இவர் பொறுப்பு வகித்துள்ளார்.
நரேந்திர மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தல் குளறுபடி உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து டெல்லியில் சிஜேபி கட்சி (கரப்பான் பூச்சி கட்சி) சார்பில் போராட்டம் நடைபெற்று வந்தது.
நீட் வினாத்தாள் கசிவால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர்கள், இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியறுத்தினர். எனினும், அவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்காமல் இருந்தது.
இதனிடையே, கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்ற சிஜேபி கட்சியினர் மீதும், அவர்களுக்கு ஆதரவாக வந்திருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஏராளமான மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில், இதனைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.
போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.