×

இயக்குனராக தனுஷின் மெகா கம்பேக்! சிக்ஸ் பேக் உடன் திரையை ஆள வரும் ரஜினியின் பேரப் பிள்ளை..!
 

 

ஒரு நடிகராக முன்னணியில் இருக்கும் பொழுதே , இயக்குனராக அவதாரம் எடுத்து அதிலும் வெற்றி பெற்றவர் தனுஷ். இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால் , தான் இயக்கிய படங்களில் புதுமுகங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இயக்கியதுதான்.

தற்போது தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களை தனுஷ் கையில் வைத்திருந்தாலும், தனது மகனை கதாநாயகனாக உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தனுஷ் தனது மகன் யாத்ராவை வைத்து ஒரு அதிரடி திரைப்படத்தை உருவாக்க ஆயத்தமாகி வருகிறார்.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் என்று பெயர் வங்கி தனுஷ் , ஒரு சில ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து தேசிய அளவில் சிறந்த நடிகர் என்ற பெயரை தக்க வைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் சில ஹாலிவுட் வெப் சீரிஸ்களிலும் தனுஷ் தலைக்காட்டியுள்ளார்.

தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா ஒரு சினிமா இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததுதான். அது மட்டுமல்லாமல் தனுஷின் சகோதரர் செல்வராகவனும் தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற ஒரு இயக்குனர். தனுஷின் சினிமா வளர்ச்சியில் அவரது சகோதரர் செல்வராகவனின் பங்கு மிகவும் பெரியது. தொடக்கத்தில் தனுஷை வைத்து தொடர் வெற்றி படங்களை அவர் கொடுத்து முன்னணி கதாநாயகனாக உயர்த்தியுள்ளார்.

தனது அப்பா மற்றும் அண்ணன் அவர்களின் பாணியை பின்பற்றி தனுஷிற்கும் இயக்குனராகவும் ஆர்வம் இருந்து வந்துள்ளது. அதைத் தொடர்ந்து தனுஷ், ராஜ்கிரண் மற்றும் ரேவதி நடிப்பில் பவர் பாண்டி என்ற திரைப்படத்தை முதன் முதலாக இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் தனுஷின் மற்றொரு பரிணாமத்தை தமிழ் சினிமாவிற்கு வெளிப்படுத்தியது. அந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியில் நல்ல பாராட்டினை பெற்று தந்தது.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் ராயன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ராயன் திரைப்படம் ,அந்த ஆண்டின் பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக இணைந்தது. பின்னர் புதுமுகங்களை மையப்படுத்தி தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாக்கி இருந்தார்.

இதற்குப் பின்னர் தன்னை நாயகனாக வைத்தே 'இட்லி கடை' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது தனுஷ் தனது மூத்த மகன் யாத்ராவை கதாநாயகனாக வைத்து, ஒரு அதிரடியான திரைக்கதையினை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படம் ரஜினியின் திரைப்பட பாணியில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். யாத்ரா ரஜினியின் மூத்த பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை தனுசுக்கு நெருக்கமான R டேக் சினிமாஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த திரைப்படத்தின் தொடக்க பூஜை அனேகமாக 2026 ஆம் ஆண்டு இறுதியிலோ அல்லது 2027 ஆம் தொடக்கத்திலோ ஆரம்பிக்கப்படலாம் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. ரஜினி மற்றும் தனுஷ் குடும்பத்தில் இருந்து இன்னொரு வாரிசு திரைக்கு வருகிறார்.