×

பாலியல் புகார் வந்த அரைமணி நேரத்தில் போலீஸ் சம்பவ இடத்தில் இருக்க வேண்டும்- டிஜிபி

 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு காவல்துறை செல்ல வேண்டுமென தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை எப்படி கையாள வேண்டும் என விசாரணை அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வழிக்காட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளார். அதில் தமிழக காவல்துறையால் உருவாக்கப்பட்ட 1098,181,100 ஆகிய உதவி எண்கள் மூலமாகவோ, பாதிக்கப்பட்ட நபர் நேரடியாகவோ, குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவோ மற்றும் சமூக நலத்துறை, தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் காவல் நிலையங்களுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்கக்கூடிய விசாரணை அதிகாரி சமூக நல பாதுகாப்பு துறையால் நிறுவப்பட்டுள்ள மன நல ஆலோசகர் ஒருவரை நியமிக்க கோரிக்கை வைத்து நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் உடனடியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ உதவி அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் மூலமாக குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் நிகழ்ந்தால் உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளை விசாரணை அதிகாரி உடனடியாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டுமெனவும், பாலியல் புகார் வந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று, பாதிக்கப்பட்ட குழந்தையை மீட்டு தாமதிக்காமல் மருத்துவ உதவி வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.