×

ஊரடங்கு மீறல் தொடர்பாக 10 லட்சம் வழக்குகள் ரத்து;  டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை!

 

கொரோனா விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதாக பதிவான 8 லட்சத்து 98 ஆயிரத்து 948 வழக்குகளை ரத்து செய்து  முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனால் காவல்துறையினரை தங்கள்  பணி செய்ய விடாமல் தடுத்தல், முறைகேடாக இ பாஸ் பெற்றது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி வடக்கு மண்டலத்தில் 3,12,168, மத்திய மண்டலத்தில் 1,35,307, மேற்கு மண்டலத்தில் 1,25,034, தென்மண்டலத்தில் 1,60,233 வழக்குகள் அடங்கும். இதன்மூலம் 15 லட்சத்து 66 ஆயிரத்து 84 பேர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறியதாக போடப்பட்ட 10 லட்சம் வழக்குகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணைப்படி வழக்குகளை ரத்து செய்ய அறிவுறுத்தி சென்னை தவிர அனைத்து மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 2019 முதல் 2020 வரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும்,  இ-பாஸ் முறைகேடு, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றங்களை தவிர அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்த நிலையில் திரும்பப்பெற டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.