×

முழு ஊரடங்கின் போது மக்கள் மட்டுமல்ல போலீசும் இதையெல்லாம் கடைபிடிக்கணும்!!

 

தமிழகத்தில் ஊரடங்கின்போது பொதுமக்களிடம் காவலர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நேற்று இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் காவல்துறையினர் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கின்போது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு சமயங்களில் பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல் துறையினர் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் தொடர்பான அறிவிப்பை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய மற்றும் மாநில அரசு துறை அதிகாரிகள், ஊழியர்கள், நீதிமன்றம் மற்றும் நீதித்துறை தொடர்பான பணிகளில் ஈடுபடுவோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர், வங்கி, பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அலுவல் காரணங்களுக்காக பயணம் மேற்கொள்வோரை அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும். அதேபோல அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், மின்சாரம், தகவல் தொடர்பு, தினசரிப் பத்திரிகை விநியோகம், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து சேவைகள், ஏ.டி.எம் மையங்கள், சரக்கு மற்றும் எரிபொருள் வாகனங்களில் பணிபுரிவோரை அடையாள அட்டையை பார்வையிட்டு பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை மையங்கள் உள்ளிட்ட நிறுவன பணியாளர்களையும் அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சரக்கு வாகனங்கள் உட்பட பல்வகை சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படும் விவசாய விலை பொருட்களான காய்கறி, பழங்கள், இறைச்சி, முட்டை போன்றவற்றை எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்தாமல் உடனடியாக செல்ல அனுமதிக்க வேண்டும், ஞாயிறு முழு ஊரடங்கின்போது உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவன பணியாளர்களை அரசால் வழங்கப்பட்டுள்ள நேரங்களில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்லும் பயணிகளையும், அங்கிருந்து வீடுகளுக்கு திரும்பும் பயணிகளையும் படுக்காமல் விசாரித்து அனுப்ப வேண்டும், இரவு நேர ஊரடங்கு வாகன சோதனையின்போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடன் காவல் துறையினர் நடந்து கொள்ள வேண்டும் வாகனத்தை சோதனை செய்ய வேண்டியிருந்தால் காவலர்கள் கையுறை அணிந்து சோதனையில் ஈடுபட வேண்டும் அடிக்கடி காவல் துறையினர் தங்கள் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.