இயற்கையை மதிக்காத பக்தி அர்த்தமற்றது! லண்டனில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை பங்கமாக கலாய்த்த NRI பெண்…
லண்டனின் புகழ்பெற்ற தீம்ஸ் (River Thames) நதிக்கரைக்கு அருகே இருந்து NRI பெண் நிலாஞ்சனா ஹசாரிகா வர்மா வெளியிட்ட வீடியோ பதிவில், ஆன்மீகத்தின் பெயரால் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தபவர்களை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
அந்த வைரல் வீடியோவில், தீம்ஸ் நதிக்கரையின் தூய்மையான பகுதியைக் காண்பிக்கும் நிலாஞ்சனா, அங்குப் பறவைகளுக்கு உணவளிப்பதற்கும் நீந்துவதற்கும் கூட கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து நகைச்சுவையான பாணியிலும், கிண்டலாகவும் பேசிய அவர், "நாம் நமது கலாச்சாரத்தை உலகிற்குப் பறைசாற்ற வேண்டும் அல்லவா? அதனால் தான் விநாயகர் சிலையைத் தீம்ஸ் நதியில் கரைத்து, நதியை புனிதப்படுத்தி, நமது கடமையில் இருந்து விடுபடுகிறோம்... வாவ்! இதைப் பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று கூறினார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் இரு தரப்பாகப் பிரிந்து விவாதித்து வருகின்றனர்.
-
ஆதரவு குரல்கள்: நிலாஞ்சனாவின் கருத்தை ஆதரித்த பல பயனர்கள், "உள்ளூர் சட்டங்களையும் இயற்கையையும் மதிக்காமல் செய்யப்படும் பக்தி அர்த்தமற்றது. இயற்கையின் மீது பொறுப்பில்லாமல் செய்யப்படும் வழிபாடு அதன் நோக்கத்தையே பாழாக்கிவிடும்" என்று பதிவிட்டுள்ளனர்.
-
எதிர்ப்பு குரல்கள்: மற்றொரு தரப்பினர், வெளிநாடுகளில் இதுபோன்ற கலாச்சார நிகழ்வுகளை விமர்சிப்பது நமது பாரம்பரியத்திற்கும் நம்பிக்கைக்கும் எதிரானது என்று நிலாஞ்சனாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவாதம் தீவிரமடைந்த நிலையில், நிலாஞ்சனா தனது பதிவின் தலைப்பில் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். அதில், "யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவதோ அல்லது நமது பாரம்பரியத்தை அவமதிப்பதோ எனது நோக்கமல்ல. நமது பாரம்பரியங்கள் மிகவும் அழகானவை; ஆனால், வெளிநாட்டு மண்ணில் அங்கிருக்கும் சட்ட திட்டங்களையும் சுற்றுச்சூழலையும் மதிப்பது அதைவிட முக்கியமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.