செப்.1 முதல் அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை..!!
தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
ஆனாலும் சில கோவில்களில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படாமல் சமீப காலமாக சில பக்தர்கள் கோவில்களுக்குள் புகைப்படம் எடுத்தல், வீடியோ பதிவு செய்தல், செல்பி எடுத்தல், சமூக வலைதளங்களுக்கான குறும்படம் (ரீல்ஸ்) எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனால் கோவில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மீக சூழல் பாதிக்கப்படுவதோடு இறை வழிபாடு செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் வசதிக்காக 5 இடங்களில் கட்டண பாதுகாப்பு அறைகள் அமைப்பு :
செல்போன்களை ரூ.5 கட்டணத்தில் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்; தரிசனம் முடிந்ததும் டோக்கனை காண்பித்து செல்போனை திரும்பப் பெறலாம். இதற்காக 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் தடையை மீறி செல்போனை கோயிலுக்குள் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.