"வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை" - வனத்துறை விளக்கம்
கோவை பூண்டி மலைத் தொடர்களில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று முதல் வெள்ளிங்கிரி மலையற்றத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று மழை ஏறிய பெண் பக்தர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். அதில் ஒருவர் உடல் அடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உடலை கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முன்பாகவே வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர்கள் கீழே இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலே உள்ள பக்தர்கள் மெதுவாக இறங்கி வருகின்றனர். அவர்களை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் வெள்ளிங்கிரி ஆறு மற்றும் ஏழாவது மலைகளில் பனிக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்கமாக மார்ச் முதல் மே 31ஆம் தேதி வரை மட்டுமே வெள்ளிங்கிரி மலையற்றதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள், இந்நிலையில் இந்த ஆண்டு முன்னதாகவே பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கன மழை காரணமாக மே 31 க்கு முன்னதாகவே வெள்ளிங்கிரி மலை ஏற்றத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கவில்லை என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் சிக்கி உள்ளனர் என்ற தகவல் தவறானது, வெள்ளியங்கிரி மேலே ஏறிய பக்தர்கள் மெதுவாக இறங்கி கொண்டுள்ளனர். வெள்ளியங்கிரி மலையில் வனத்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது, ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.