×

திருப்பதியில் நாளை முதல் நேரடியாக இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி 

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு நாட்களில் 1.37 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் 7.04 கோடி காணிக்கையாக செலுத்தினர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ஒட்டி கடந்த 30 ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் நாளான வைகுண்ட ஏகாதசி அன்று 67 ஆயிரத்து 53 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ 2. 2 5 கோடி கணக்கியாக செலுத்தினர். இரண்டாம் நாளான வைகுண்ட  துவாதசி அன்று 70 ஆயிரத்து 256 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ 4 .79 கோடி காணிக்கையாக செலுத்தினர். இரண்டு நாட்களில்  1 லட்சத்து 37 ஆயிரத்து 399 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையாக ரூ 7.04 கோடி காணிக்கையாக செலுத்திருந்தனர். இதே போன்று வேண்டுதலின்படி 41 ஆயிரத்து 43 பக்தர்கள் மொட்டையடித்து தலை முடிகளை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 

வைகுண்ட ஏகாதசியன்று ஏழுமலையான் கோயிலில் திறக்கப்பட்ட வைகுண்ட வாயில் தரிசனத்திற்காக பக்தர்கள் 8 ம் தேதி வரை அனுமதிக்கப்பட உள்ளனர். இதில்  இன்று வரை மூன்று நாட்களுக்கு உண்டான இலவச டோக்கன்கள்  ஆன்லைனில் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் இன்று வரை அனுமதிக்கப்பட உள்ளனர். நாளை முதல் 8 ம் தேதி வரை ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்கள் என ரூ 300 டிக்கெட் ஆன்லைனில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படுவது  8 ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு திருமலைக்கு நேரடியாக வரும் பக்தர்களை நாளை காலை முதல் இலவச தரிசன வரிசையில் அனுமதிக்கப்பட்டு  சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக இன்று இரவு முதலே இலவச தரிசன வரிசையில் அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரிசையில் பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து காத்திருப்பு நேரம் இருக்கும் என்பதால் வரிசைகள் முழுவதும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட கேமிராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பக்தர்களுக்கு துல்லியமாக சாமி தரிசனம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என அவ்வப்போது வரிசைகளில் பொருத்தப்பட்டுள்ள டிஸ்ப்ளே மூலம் அறிவிக்கப்படும். எனவே பக்தர்களுக்கு வரிசைகளிலேயே அவ்வப்போது பால், காபி  அன்னப்பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தங்களுக்கான நேரம் வரும் வரை தேவஸ்தான அதிகாரிகள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.