☰
×

திருவண்ணாமலையில் அபிஷேகம் பார்த்தப்படி உயிரைவிட்ட பக்தர்

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நடைபெற்ற மூலவர் அபிஷேகத்தில் கலந்து கொண்ட ஆந்திர மாநில பக்தர் மூச்சுத் திணறால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாவட்ட, மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பௌர்ணமி, விசேஷ நாட்களில் இலட்சக்கணக்கான பக்தர்களும், வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு, கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். அண்ணாமலையார் கோவிலில் உள்ள மூலவருக்கு தினமும் 6 கால பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த அபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து பக்தர்கள் அபிஷேகத்தில் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற அபிஷேகத்தில் தெலுங்கானா மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) என்பவர் தனது தாய் மற்றும் மனைவி குழந்தைகளுடன் அபிஷேகத்தில் கலந்து கொண்டுள்ளார். அண்ணாமலையார் அபிஷேகம் முடித்துவிட்டு கருவறை விட்டு வைகுந்த வாயில் வழியாக உண்ணாமுலையம்மன் சன்னதிக்கு செல்லும் வழியில் சுரேஷுக்கு மூச்சுத் திணல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி உள்ளிட்டவர்கள் உடனடியாக தகவல் அளித்ததின் பெயரில் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் சுரேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாநகர காவல்  நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அபிஷேகத்தில் கலந்துகொண்ட ஒருவர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.