“திருவிழாவின் போது மட்டுமே அம்மன் தரிசனம்”- தேவகோட்டை கோட்டை அம்மன் ஆடித் திருவிழா ஆரம்பம்
திருவிழாவின் போது மட்டுமே தரிசனம் வழங்கும் தேவகோட்டை கோட்டை அம்மன் ஆடித் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
ஆடி மாதம் அம்மனுக்கே உள்ள பிரத்யேக மாதம் என்றாலும் தேவகோட்டையில் உள்ள கோட்டையம்மன் ஆடித் திருவிழா மிகப் பிரமாண்டமாக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் முதல் திங்கட்கிழமை அன்று திருவிழா தொடங்கும். இந்த வருடம் இன்று (20/07/2026) மேடை போடுதல் நிகழ்வுடன் திருவிழா இனிதே தொடங்கியது. திருவிழாவின் போது மட்டும்தான் அம்மனைத் தரிசிக்க முடியும். அதுவரை கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பீடத்திற்குத்தான் வழிபாடு எல்லாமே. வருடம் முழுமைக்கும் நீரில் இருக்கும் அம்மனை ஊரணியில் இருந்து மண் எடுத்துக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்கிறார்கள். அதன் பின் தினம் ஒரு அலங்காரத்தில் ஜொலிக்கிறாள் கோட்டை அம்மன். செவ்வாய் அன்றும் மேடையில் உள்ள பீடத்துக்குத்தான் அபிஷேகம் ஆராதனை எல்லாம். பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்மனுக்கும் ஆராதனை அர்ச்சனை உண்டு. இது பதினைந்து நாள் திருவிழா.
இந்தக் கோயில் தேவகோட்டை நகரத்தார்களுக்கு சொந்தமானது. அம்மனுக்குக் கழுத்துரு (கழுத்திரு) சாத்துதல் (திருமாங்கல்யம் அணிவித்தல்) என்றொரு வேண்டுதலும் சிறப்பாக நடைபெறுகிறது. வேண்டிக் கொண்டவர்கள் அதை அலுவலகத்தில் பணம் செலுத்திப் பெற்று அம்மனுக்கு சார்த்தி ஆராதிக்கிறார்கள்.
கோட்டை அம்மன் கோயில் மேடை மிக விசேஷம்!
தேவகோட்டை கோட்டை அம்மன் கோயில் கர்ப்பகிருகத்தில் மேடை மட்டுமே எப்போதும் இருக்கும். தேவகோட்டையின் காவல் தெய்வம் இந்த அம்மன் தான். சக்தி மிக்க அம்மன்.இந்த திருவிழாவின் போது தான் அம்மன் ஊருக்குள் பிரவேசித்து 15 நாட்கள் தங்கி இருப்பார்கள். கர்ப்பகிருகத்தில் மேடை மட்டுமே எப்போதும் இருக்கும். இச்சமயம் தான் ஆற்றில் இருந்து குடத்தில் நீர் எடுத்து, ஆற்றங்கரைக் கோவிலில் கொண்டு வைத்து தென்னம் பாளையை அதில் வைத்து அம்மனை ஆவாகனம் செய்து இங்கு கொண்டு வந்து வைப்பார்கள்.அம்மனுக்கு நேரில் வெளியில் அமைந்திருக்கும் மேடைக்கு பால் ,மஞ்சள்,குங்குமம் மற்றும் பல்வேறு மங்கல பொருட்கள் அபிஷேகம் நடை பெறுகிறது.
ஊரின் வெளியே அம்மனின் பழங்கால கோவில் இருக்கிறது. இது ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்து இருக்கிறது.ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு அலங்காரம். நினைத்ததை முடித்துக் கொடுக்கும் அம்மன் இவள். இங்கு வீடு,விமானம், கால்,கை,கண்மலர்,உடம்பு,பாம்பு, என நிறைய விதமான பொருட்கள் அர்ச்சனை டிக்கட் கொடுக்கும் இடத்தில் கிடைக்கும். இதற்கு பணம் கட்டி வாங்க, ஒரு தட்டில் வைத்து கொடுப்பார்கள் (இது விலைக்கு அல்ல) அதை பெற்றுக் கொண்டு போய் அர்ச்சகரிடம் கொடுத்து அர்ச்சனை செய்யும் போது இதை அவர் சாமியிடம் வைத்து பூசை பண்ணிக் கொடுப்பார்கள். மீண்டும் அப்பொருளை திருப்பி வாங்கிய இடத்தில் கொடுத்து விட வேண்டும். நம் வேண்டுதலுக்கு ஏற்ற பொருட்களை மட்டும் வைத்து வழி பட அடுத்த ஆண்டுக்குள் அது கண்டிப்பாக நிறைவடையும்.
வேறு மதத்தினரும் இந்த அம்மனை நாடி வருகிறார்கள். ஊரின் காவல் தெய்வம் என்பதாலும், அவர்களின் விருப்பம் நிறை வேறுகிறது என்பதாலும், அம்மனின் சக்தியை உணர்ந்ததாலும் ஒற்றுமையாக ஊர் மக்கள் வழிபடுகிறார்கள். இங்கே இந்து மதத்தவர் மட்டுமல்ல மற்ற மதத்தினரும் திருவிழா முடியும் வரை அசைவம் சமைப்பதில்லை. இந்து மதத்தினர் சமையலில் கடுகுகூட தாளிப்பதில்லை.15 நாட்களுக்கு மக்கள் உணவுப் பொருட்களை வறுக்க மாட்டார்கள், இது அம்மனின் வெப்பத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. விழா முடிந்ததும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் கோயில் குளத்தில் மூழ்கி உஷ்ணத்தைக் குறைக்கும். பொதுவாக அம்மன் கோவில்களில் கோழி, ஆடு பலிகொடுத்து வழி படுவர். ஆனால் தேவகோட்டை கோட்டை அம்மன் வழிபாடு மிக வித்தியாசமானது. யாரும் எந்த பலியும் கொடுப்பதில்லை அதுமட்டுமல்ல, விழா நடக்கும் நாட்களில் தேவகோட்டை நகருக்குள் கோழி ஆடு இறைச்சி கடைகள் அனைத்தும் மூடி இருக்கும். தேவகோட்டை எல்லையான ஆற்றுப்பாலம் தாண்டியே இறைச்சி கடைகள் இருக்கும். 15 நாட்களிலும் அனைத்து இறைச்சிக் கடைகளும் நகருக்குள் மூடியிருக்கும் என்பது மிகவும் வித்தியாசமானது. வேறு எந்த ஊரிலும் இது போன்ற ஒரு நிகழ்வது இல்லை. எனவே கோட்டயம்மனை பக்தர்கள் மட்டுமல்ல ஊர் மக்கள் அனைவரும் வழி பட்டு வருவதுபோல் ஆகும். இறைச்சிக் கடை வைத்திருப்பவர்கள் பலர் வேறு மதத்தினராக இருந்தாலும் அனைவரும் இந்த மரபினைக் கடைப்பிடித்து வருவது என்பது பாராட்டுக்குரியது. தேவகோட்டை மாநகரில் வருடா வருடம் விமரிசையாக நடைபெறும் கோட்டை அம்மன் கோவில் ஆடித்திருவிழா இன்று தொடங்கி 15 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது