×

வரும் பிப்.11-ம் தேதி தமிழகம் வருகிறார் துணை தேர்தல் ஆணையர்..!

 

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகிறார்.

சட்டப் பேரவை தேர்தலுக்கான தேதி இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் துவக்கத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம் ஆகிய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் தமிழ்நாட்டில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, அசாமை தவிர இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரள, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனைவரும் சென்று ஆய்வு செய்யவுள்ளனர்.

முன்னதாக தேர்தல் ஆணையம் சார்பில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி துவங்கி, ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

பொதுவாக தேர்தல் காலங்களில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். மாநிலங்களில் உள்ள தேர்தல் தொடர்பான பணிகள், மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, மேலும் வாக்குச்சாவடிகள், வாக்கு இயந்திரங்கள் தொடர்பாகவும் ஆய்வுகளை மேற்கொள்வர்.அந்த வகையில் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்.

அப்போது அவர், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து, தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.