இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!
பிப்ரவரி-7 ஆம் தேதி அன்று விருதுநகரில் நடைபெறவிருக்கும் கழக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி பேசியதாவது;
மதுரை தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை உள்ள 58 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணியின் மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மாநகர அமைப்பாளர்கள் பங்கேற்றுள்ளீர்கள். தேர்தலை முன்னிட்டு, மிக முக்கியமான இந்தத் தென்மண்டலச் சந்திப்பை நாம் நடத்தவிருக்கின்றோம்.
இளைஞர் அணியைப் பொறுத்தவரை எந்த நிகழ்ச்சியும் இளைஞர் அணிக்கு வலுசேர்க்கும் விதத்திலும், அதே நேரத்தில் கழகத்திற்கு இன்னும் கூடுதல் வலிமை சேர்க்கும் விதத்திலும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கவனமாகத் திட்டமிட்டுச் செய்து வருகிறோம். கடந்த டிசம்பர் மாதத்தில் திருவண்ணாமலையில் நடைபெற்ற வட மண்டல நிர்வாகிகள் சந்திப்பை மிகப்பெரிய ஒரு வெற்றிச் சந்திப்பாக, நடத்திக் காட்டினோம்.
ஏற்கனவே நம்முடைய இரண்டாவது மாநில மாநாட்டை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சேலத்தில் மிகச் சிறப்பாக, மிகப்பெரிய வெற்றி மாநாடாக நடத்திக் காட்டினோம். அந்த மாநாட்டின் வெற்றிக்காக இங்கு வந்துள்ள நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய உழைப்பை, நூறு சதவிகிதம் வழங்கியுள்ளீர்கள். இதனைத் தொடர்ந்து இளைஞர் அணியின் சார்பில் தற்போது பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
குறிப்பாக, இந்தத் தெற்கு மண்டலத்தில் உள்ள 58 தொகுதிகளில் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முரசொலியில் அதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இதுவரை 47 தொகுதிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய நிர்வாகிகள் எவருமே எளிதாக, பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே அறிவிக்கப்படவில்லை. மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்களிடம் பரிந்துரை பெறுகிறோம்.
அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் அன்பகத்திலிருந்து ஒரு குழு அமைக்கப்பட்டு, நாங்களே ஒவ்வொருவரையும் தொலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களின் பின்னணி, கழக ஆர்வம், கொள்கைப் பிடிப்பு ஆகியவற்றைச் சரிபார்க்கின்றோம். அதன் அடிப்படையில் அவர்களின் ஆர்வம் மற்றும் ஈடுபாட்டைக் கணக்கில் கொண்டுதான் தொகுதி வாரியாக அறிவிப்புகள் வெளிவருகின்றன. அவர்களையெல்லாம் ஓரிடத்தில் ஒன்றுகூடச் செய்து, 2026 சட்டமன்றத் தேர்தற்பணிக்கு அவர்களைத் தயார் செய்வதுதான் இந்த நிர்வாகிகள் சந்திப்பின் நோக்கம்.
நம் கழகத்தின் கொள்கைகளை, அரசின் சாதனைகளை உள்வாங்கி கழகப் பணியை வலிமையோடு செய்ய வேண்டும் என்பதே இச்சந்திப்பின் ஒரே நோக்கம். இச்சந்திப்பு, தேர்தல் நேரத்தில் நடைபெற்றாலும், அது தேர்தலுக்குப் பயனுள்ள ஒரு கூட்டமாகவே அமையும். ஆனால், அது மட்டுமே நம்முடைய இலக்கல்ல. எதிர்காலத்தில் கழகத்திற்கு மேலும் பல இளைஞர்களை அழைத்து வந்து வலிமை சேர்க்கும் ஒரு பாசறைக் கூட்டமாக இச்சந்திப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். நம்முடைய தெற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பின் வெற்றி. 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்க வேண்டும். ‘வெல்லுவோம் 200, படைப்போம் வரலாறு’. இவ்வாறு அவர் கூறினார்.