×

புயலாக மாறுகிறதா காற்றழுத்த தாழ்வு மண்டலம்? 

 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சென்னையிலிருந்து 260 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல், நாளை காலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும். இதன் காரணமாக, இன்று மாலை முதல் மழை அதிகரிக்கும். இது புயலாக மாறும் வாய்ப்பில்லை. தாழ்வு மண்டலம் கரையை கடந்த பிறகு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பிற்பகலுக்குப் பிறகு மழை குறையத் தொடங்கும். 

அரபிக் கடலில் இருந்து வீசிய காற்று, காற்றழுத்த தாழ்வுப் பகுதியை நோக்கி நகர்ந்ததன் காரணமாக, நெல்லையில் கனமழை பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும்.

இதன் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்” என்றார்.