×

#BREAKING சென்னையை நெருங்குகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரையை நெருங்குவதால் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

வட தமிழகக் கடற்கரையில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழ்நாட்டின் தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது.  

சென்னைக்கு தென்-தென்கிழக்கே சுமார் 150 கி.மீ., புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 120 கி.மீ., காரைக்காலில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 150 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலையில் புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே வடக்கு தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்கும் என 
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனையொட்டி, கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நாளை 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், பெரம்பலூர். திருவள்ளூர், ராணிப்பேட்டை, தருமபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.