×

‘ஜெயலலிதா இல்லத்திற்குள் அனுமதி மறுப்பு’ : தமிழக அரசு மேல்முறையீடு!

போயஸ் கார்டனில் இருக்கும் ஜெயலலிதா இல்லத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தாங்கள் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டும் எங்களது சொத்துக்களை அரசுடைமை ஆக்குவதை ஏற்க முடியாது என்றும் அதனால் இந்த
 

போயஸ் கார்டனில் இருக்கும் ஜெயலலிதா இல்லத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தாங்கள் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டும் எங்களது சொத்துக்களை அரசுடைமை ஆக்குவதை ஏற்க முடியாது என்றும் அதனால் இந்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஜனவரி 28ஆம் தேதி (இன்று) வேதா இல்லம் திறக்கப்படும் என தமிழக அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டது. இதனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென தீபா மற்றும் தீபக் தரப்பில் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. அதனை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து, நேற்று இடைக்கால தீர்ப்பு வெளியிடப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

அதன்படி, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை திறக்க தடை இல்லை என ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவிட்டார். வளாகத்தை மட்டுமே திறக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்க படாது என்றும் அவர் உத்தரவு பிறப்பித்தார். ஜெயலலிதாவின் வேதா இல்லம் இன்று திறக்கப்படவிருந்த நிலையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கோர்ட்டு தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக, தலைமை நீதிபதி அமர்வு முன்பு நாளை விசாரிக்கப்பட உள்ளது.