×

தமிழகத்தில் 9,000-ஐ கடந்த டெங்கு பாதிப்பு! அலர்ட் மக்களே! தடுக்கும் வழிமுறைகள் இதோ!

 

தமிழ்நாட்டில் பெரும்பாலும் டெங்கு பாதிப்பு நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் அதிகரிக்கும். ஆனால், தற்போது தமிழகத்தில் டெங்கு பாதிப்பு நடப்பாண்டில் 9 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் 23 ஆயிரத்து 407 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 12 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெங்கு அறிகுறிகள்

தீவிர காய்ச்சல், தலைவலி, கண்களுக்கு பின்னால் வலி, மூட்டு வலி , உடல் சோர்வு, மூட்டு மற்றும் தசை வலி, வாந்தி, தோலில் சிகப்பு தடிப்புகள் ஆகியவை டெங்குவின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.

இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

தமிழக அரசு தீவிர நடவடிக்கை

இதனிடையே, டெங்கு பரவுவதைத் தடுக்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், பொதுமக்களிடம் இதுதொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணிநேரமும் காய்ச்சல் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு கண்காணிப்பு அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், டெங்கு மற்றும் காய்ச்சல் போன்ற பருவகால நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் காய்ச்சல் பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுதவிர, கொசுக்களை அழிக்கும் நடவடிக்கையிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் டெங்கு தடுப்புக்காக தினமும் 25,000-க்கும் மேற்பட்ட DBC பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுத்தப்படுவர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

டெங்கு பரவலை தடுப்பது எப்படி?

டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் உற்பத்தியாகின்றன. எனவே, வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பழைய டயர்கள், தொட்டிகள் மற்றும் தேவையற்ற பாத்திரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். பொதுவாக, ஏடிஸ் கொசுக்கள் பகலில் கடிக்கும் என்பதால், எப்போது தூங்கினாலும் கொசுவலைகளை பயன்படுத்த வேண்டும்.

ஜன்னல் மற்றும் கதவுகளில் கொசுவலைக் கதவுகளை பொருத்துவது நல்லது. முழுக்கை சட்டைகளை அணிவதும் கொசுக்கடியை தவிர்க்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.