×

கர்நாடகாவில் ஜனநாயகன் காட்சிகள் ரத்து..!

 

தமிழக முதலமைச்சர் விஜய்யின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாண்டியாவில் உள்ள குருஸ்ரீ திரையரங்கில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அங்கு திரண்ட கன்னட அமைப்பினர் மற்றும் போராட்டக்காரர்கள், திடீரென திரையரங்கை முற்றுகையிட்டனர். தொடர்ந்து தியேட்டர் நிர்வாகிகளுடன் பேசிய அவர்கள், ஜனநாயகன் திரைப்படக் காட்சிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

போராட்டக்காரர்களின் எதிர்ப்பை அடுத்து, ‘ஜனநாயகன்’ படக்காட்சிகளை ரத்து செய்ய தியேட்டர் நிர்வாகம் சம்மதித்தது.

இதையடுத்து, திரையரங்கிற்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த ஜனநாயகன் போஸ்டர்களை போராட்டக்காரர்கள் கிழித்து எறிந்ததுடன், காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவுக்கு எதிராகக் முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, போராட்டக்காரர்கள், மாவட்ட ஆட்சியர் மூலமாக கர்நாடக அரசுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், மாண்டியா பகுதி விவசாயிகளின் போராட்டத்திற்குத் தங்களது முழு ஆதரவைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கர்நாடகாவில் நிலவி வரும் தற்போதைய தண்ணீர் பற்றாக்குறை மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொள்ளாமல் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது என்றும், தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என்றும் அவர்கள் திட்டவட்டமாக் கூறியுள்ளனர்.

எதிர்ப்பையும் மீறி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என்றும் கன்னட அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதனால் மாண்டியா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பகிர்வு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அங்கு போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.