டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு 'Z' பிரிவு பாதுக்காப்பு..!
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு 'Z' பிரிவு பாதுக்காப்பு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில், நேற்று பொதுமக்களின் குறைகளை கேட்பதற்காக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், தீடிரென முதலமைச்சர் ரேகா குப்தாவை தாக்கினார். முதலமைச்சரின் முடியை பிடித்து இழுத்து அவரது கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் முதலமைச்சர் மீது தாக்குதல் நடத்திய குஜராத் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் கிம்ஜி(41) என்கிற நபரை பிடித்து டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடனடியாக அந்த நபரை கைது செய்த டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை எனும் பட்சத்தில், நாட்டில் உள்ள மற்ற பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியா இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தன. இந்த நிலையில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு 'Z'பிரிவு பாதுகாப்பு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.